Monday, August 31, 2009

பிழை திருத்துபவரின் மனைவி

அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை.


காகிதங்கள் கிழிக்கபடும் போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் எதையும் வெளிப்படுத்துதில்லை. அதைக் கூட அவளால் சகித்து கொள்ள முடிவதில்லை. இதற்காக அவள் காகிதங்களை நீரில் ஊற விட்டுவிடுவாள். அவள் வரையில் அது தான் காகிதங்களுக்குத் தரப்படும் மிக மோசமான தண்டனை. சமையல் செய்யும் போது இரும்பு வாளியில் உள்ள தண்ணீரில் காகிதத்தைப் போட்டுவிட்டால் மாலை பார்க்கும் போது அது கரைந்து துகள் துகளாக மிதந்து தண்ணீரில் கலந்து போயிருக்கும்.


காகிதங்களில் கரையும் போது அதில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் எங்கே போய்விடுகின்றன. அந்த வார்த்தைகள் உப்புத் தண்ணீருக்குள் கரைந்து போய்விடுவதை போல கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போயிருக்குமா? அவள் வாளித் தண்ணீரை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். சில நேரம் யோசிக்கும் போது வியப்பாக இருக்கும்.


காகிதங்களுக்கும் வார்த்தைகளுக்குள் உள்ள உறவு எத்தகையது. காகிதங்கள் தன் மீது எழுதப்படும் வரிகளுக்கு சம்மதம் தருகிறதா என்ன? காகிதங்களுக்கும் அதில் பதிந்துள்ள சொற்களுக்கும் நடுவில் இடைவெளியிருக்கிறதா? இப்படி யோசிக்க துவங்கியதும் நான் ஏன் இது போன்ற வீண் யோசனைகளை வளர்த்து கொண்டு போகிறேன் என்று அவள் மீதே அவளுக்கு ஆத்திரமாக வரும்.


அவள் வீட்டில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் நிரம்பியிருக்கின்றன. அவள் தனது பதினேழாவது வயதில் மந்திர மூர்த்தியை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வரும் வரை பாடப்புத்தங்களைத் தவிர வேறு எதையும் கண்டதேயில்லை. அதுவும் அவளது ஊரில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இல்லை என்பதால் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டு விட்டாள்.


ஆறேழு வருடங்கள் அவள் தீப்பெட்டி ஒட்டும் வேலை, ரப்பர்கொட்டை உடைக்கும் வேலைக்கும் போய் கொண்டிருந்தாள். தீப்பெட்டி ஆபீஸில் ரேடியோ இருந்தது. அதில் ஒலிபரப்பாகும் சினிமாப் பாட்டுகள் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த நாட்களில் சீட்டு போட்டு ஒரு ரேடியோவைச் சொந்தமாக வாங்கி விடுவதற்கு அவள் ரொம்பவும் ஆசைப்பட்டாள். ஆனால் ஒவ்வொரு முறை சீட்டு எடுக்கும் போதும் ஏதாவது ஒரு செலவு வந்து சேர்ந்துவிடும். இதனால் அவள் திருமணத்தின் போது கட்டயாம் ஒரு ரேடியோ வாங்கித் தர வேண்டும் என்று வற்புறுத்தி வாங்கிக் கொண்டுவிட்டாள். ஆனால் மந்திரமூர்த்திக்கு ரேடியோ கேட்பது பிடிக்காது என்பதால் அது எப்போதுமே அணைத்து வைக்கபட்டேயிருந்தது.


திருமணமாகி சென்னைக்கு வந்த சமயத்தில் அவளுக்கு மந்திரமூர்த்தியைக் காணப் பயமாக இருக்கும். அவர் அப்போது ராயல் பதிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது பையில் ஒரு பென்சிலும் அழி ரப்பரும் எப்போதுமிருக்கும். சில நேரம் சிவப்பு மை பேனா வைத்திருப்பதை கூட கண்டிருக்கிறாள்.


அவளுக்குப் பிழை திருத்தம் செய்வது என்பதைப் பற்றி எதுவுமே தெரியாது. எப்போதாவது இரவில் மந்திரமூர்த்தி தரையில் தலையணை போட்டு படுத்தபடியே காகிதங்களில் பென்சிலால் சுழிக்கும் போது அவள் கவனமாக பார்த்து கொண்டேயிருப்பாள். அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும். சில நேரங்களில் அவர் சப்தமாகச் சிரிப்பது கூட கேட்கும். பின்னிரவு வரை அவர் பிழைத் திருத்தம் செய்து கொண்டிருப்பார். பிறகு எழுந்து பின்கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் மூத்திரம் பெய்து விட்டு உள்ளே வந்து படுத்துக் கொள்வார்


அவளது உடலில் அவரது விரல்கள் ஊரும் போது பிழை திருத்தம் செய்வது தேவையில்லாமல் நினைவிற்கு வரும். அவர் காமத்தில் பெரிய நாட்டம் கொண்டவரில்லை. அதை ஒரு சம்பிரதாயம் போல ஈடுபடுவதும், உடல் வியர்த்து போனதும் முகம் திருப்பிக் கொண்டு உறங்கி விடுவதும் அவளுக்கு எரிச்சல் ஊட்டுவதாகயிருக்கும். உறக்கத்தில் கூட சில நேரம் அவரது விரல்கள் அசைந்தபடி இருப்பதையும் முகம் இறுக்கமடைந்திருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள்.


மந்திரமூர்த்தி யாரோடும் பேசுவது கிடையாது. அவர் காலை ஆறுமணிக்கெல்லாம் பிழை திருத்தத் துவங்கிவிடுவார். திருத்திய காகிதங்களுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறி செல்லும் போது அவரது மஞ்சள் பையில் திருத்திய பிரதிகளும் மதிய உணவுமிருக்கும். அவரது அலுவலகம் ராயப்பேட்டைப் பகுதியில் இருந்தது.


அவருக்கென்று நண்பர்களோ தெரிந்தவர்களோ எவருமோயில்லை. வெளியிலும் அவர் போவது கிடையாது. அவருக்கு இருந்த ஒரே பழக்கம் வெற்றிலை போடுவது. அதற்காக சிறிய லெதர் பை ஒன்றை வைத்திருந்தார். அந்த பையில் இருந்து பத்து நிமிசத்திற்கு ஒரு முறை இரண்டுவெற்றிலைகளைக் கிள்ளி வாயில் போட்டுக் கொள்வார்.


ஒரு முறை அவளை தான் வேலை செய்யும் அச்சகத்தில் நடைபெற்ற விழாவிற்காக அழைத்துப் போயிருந்தார். அங்கே மிகப்பெரிய இயந்திரம் ஒன்றில் காகிதம் உருளையாக சுற்றப்பட்டிருப்பதையும் அந்தக் காகித உருளையிலிருந்து வெங்காயத்தில் தோல் உரிக்க உரிக்க வந்து கொண்டிருப்பது போல காகிதம் வழிந்து கொண்டேயிருப்பதையும் அவள் மிரட்சியோடு பார்த்து கொண்டிருந்தாள்.


அந்தக் காகித உருளை முழுவதும் அச்சடிக்கபட்டுவிடும். அத்தனையும் அவர் தான் பிழைத் திருத்தம் செய்ய வேண்டுமில்லையா? அவள் தன் கணவரிடம் அதைப்பற்றி கேட்டதும் அசட்டுதனமாக உளறாதே என்றபடியே அவர் பைண்டிங் செய்யும் பகுதிக்குச் சுற்றி காட்ட அழைத்து சென்றார்


அவள் வயதில் நாலைந்து பெண்கள் காகிதங்களை வரிசை வரிசையாக அடுக்கி ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கேட்டாள். மந்திரமூர்த்தி பதில் சொல்லாமல் அது நமக்கு சரிப்படாது என்றார். அச்சகத்தின் கடைசில் இருந்த கழிப்பறைக்கு அவள் போகும் போது வழியில் தரையில் காகிதங்கள் சிதறி கிடந்தன. அதன் மீது யாவரும் மிதித்து நடந்து போய் கொண்டிருந்தார்கள்.


தென்பக்கமாக ஒரு சிறிய இரும்புக் கதவு திறந்து கிடப்பதைக் கண்டாள். உள்ளே எட்டிப்பார்த்த போது கழித்து போட்ட உபயோகமற்ற காகிதங்கள் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருந்தன. அவளுக்கு பயமாக இருந்தது. நீருற்று பொங்குவதை போல காகிதங்கள் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறதா? இந்த காகிதங்கள் எல்லாம் எங்கே போய்சேரும்? அவள் கழிப்பறைக்கு போனபிறகும் அந்த யோசனையில் இருந்து விடுபட முடியாமலிருந்தாள்.


அந்த அச்சகத்தில் அவளது கணவன் ஒரு ஆள் மட்டுமே பிழை திருத்துபவராக இருந்தார் என்பது ஏன் என்று அவளுக்கு புரியவேயில்லை. ஒரு நாள் மந்திர மூர்த்தி பிழை திருத்தி வைத்திருந்த காகிதங்களை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பார்த்தாள். அநேகமாக வரிக்கு வரி தவறுகள் அடையாளம் காணப்பட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டும் அடித்து மாற்றியும் இருந்தன.


அவளுக்கு அந்தக் காகிதத்தை பார்க்கும் போது ஏதோ குழந்தை விளையாட்டு போலத் தோணியது. சில வேளைகளில் மந்திரமூர்த்தி எல்லா எழுத்தாளர்களை விடவும் மிகப்பெரிய அறிவாளி போன்று தோன்றினார். ஒரு வேளை தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லையோ என்று கூட அவளுக்கு தோணியது. அவள் பயத்தோடு அந்த காகிதத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு அவருக்கு சாப்பாடு வைத்தாள்.


மந்திரமூர்த்தியின் கண்களில் பிழைகள் எத்தனை சிறியதாக இருந்தாலும் எப்படியோ பட்டு விடுகிறது. இந்த குணம் அவருக்கு காகிதங்களோடு மட்டும் இருக்கிறதா இல்லை தன்னையும் அவர் இது போன்று நுணுக்கிப் பார்த்து கொண்டுதானிருக்கிறாரோ? ஆரம்ப நாட்களில் அவள் மாலை நேரங்களில் வீட்டு வாசல் படியில் வந்து உட்கார்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.


வீடு திரும்பும் மந்திர மூர்த்தியின் முகம் அதைக் கண்டதுமே கடுமையடைவதை அவள் கண்டிருக்கிறாள். வீடு வந்து சேர்ந்ததும் அவர் தனது பிழைத் திருத்தும் காகிதங்களை எடுத்து வைத்துக் கொள்வார். அவள் தரும் காபியோ, காரத்தையோ அவர் எப்போது சாப்பிடுகிறார் என்று கூட தெரியாது. ஏன் அவர் இப்படி எழுத்துக்களுக்குள் தன்னை முடக்கிக் கொண்டுவிட்டார் என்று குழப்பமாக இருக்கும்.


மந்திரமூர்த்திக்கு உணவில் கூட அதிக கவனமிருப்பதில்லை. ஈர வேஷ்டியை கூட சில நேரங்களில் அணிந்து கொண்டு புறப்பட்டு போகின்றவராகயிருந்தார். எப்போதாது அவள் தயக்கத்துடன் அவர் வேறு வேலை ஏதாவது பார்க்க கூடாதா என்று கேட்கும் போது அவர் முறைத்தபடியே இந்த வேலையில் என்ன பிரச்சனை என்று கேட்பார். அவளால் விளக்கி சொல்ல முடியாது.


மந்திரமூர்த்தி அச்சகத்திற்கு செல்லாமல் ஒரு நாளும் இருந்ததே கிடையாது. அவள் உடல் நலமற்று கிடந்த நாட்களில் கூட கஞ்சி வைத்துக் கொடுத்துவிட்டு அவர் அச்சகத்திற்கு கிளம்பி போய்விடுவார். பாயில் கிடந்தபடியே அவள் பல்லைகடித்து கொண்டுகிடப்பாள். எதற்காக இதை போன்ற ஒருவரை தான் திருமணம் செய்து கொண்டோம். ஒரு எழுத்து மாறி போகின்றதைப் பற்றி கவலைப்படும் ஒரு நபர் தன்னை ஏன் கவனிக்க மறந்து போகிறார் என்று ஆத்திரமாக வரும்.


மந்திரமூர்த்தி அதைப் பற்றி யோசிப்பதேயில்லை. எப்போதாவது அவராக சினிமாவிற்கு போய்வரலாம் என்று சொல்வார். அது போன்ற நேரங்களில் அவள் அவசரமாக புடவையை மாற்றிக் கொண்டு வெளியே வருவாள். திரையரங்கத்தின் வாசலில் நின்றபடியே போஸ்டர்களில் உள்ள எழுத்துக்களை, வேர்கடைலை மடித்து தரும் காகிதங்களை கூட அவர் உன்னிப்பாகக் கவனிப்பதையும் அவரது உதடுகள் தவறுகளை முணுமுணுப்பதையும் அவளால் கேட்க முடிந்திருக்கிறது.


சினிமா தியேட்டரில் அவர் சிரித்து அவள் கண்டதேயில்லை. எப்போதும் தீராத யோசனையுடன் அவரது முகம் உறைந்து போயிருக்கும். சினிமா முடிந்த மறுநிமிசமே வீடு திரும்பிவிட வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த பதட்டமாக இருக்கும். சினிமா பார்த்த வந்த இரவுகளில் அவர் அவளோடு உறவு கொள்வது கிடையாது என்பது ஏன் என அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை


அவர்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டிருந்தது. இப்போது வரை குழந்தைகளில்லை. அவள் தனியாகவே வீட்டிலிருந்து பழகி விட்டிருந்தாள். எப்போதாவது அவளாக ஒரு எலுமிச்சைபழத்தை கையில் எடுத்துக் கொண்டு நடந்தே தட்சணாமூர்த்தியை தரிசிப்பதற்காகச் சென்று வருவாள்.


அது போன்ற நேரங்களில் அவள் கடவுளிடம் என்ன வேண்டுவது என்பது கூட அவளுக்கு மறந்து போயிருந்தது. சில நேரங்களில் சன்னதியின் முன்பாக நின்று கொண்டு கடவுளை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். ஆத்திரமாகும் நாட்களில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் யாவும் உலகிலிருந்து ஒழிந்து போய்விட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வாள். அவளது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து பென்சில்களின் மீது. ரப்பரின் மீது என நீண்டு கொண்டே போனது.


இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் பகலில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த காகிதங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கிழித்தபடியே இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய மந்திர மூர்த்தி காகிதங்கள் இறைந்து கிடந்த அறையை கண்டதும் சற்றே கோபமான குரலில் தங்கம்மா.. உனக்கு பேப்பரை கிழிக்க ஆசையிருந்தால் குப்பை தொட்டிக்கு போ .அங்கே நிறைய கிடக்கும். இன்னொரு தடவை இது போல செய்யாதே என்றபடியே அவர் தனது மேஜையில் உட்கார்ந்து கொண்டு பையில் இருந்த காகிதங்களை பிழை திருத்தம் செய்ய துவங்கினார்.


அவள் சப்தமாகக் கத்தி அழுதாள். அந்த சப்தம் அவருக்கு கேட்டதாகவே தெரியவில்லை. அவர் திருத்திய காகிதங்களைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அவள் உறங்கவேயில்லை. அவளுக்குக் காகிதங்களில் இருந்து சொற்கள் உதிர்ந்து விழுவது போன்றும் அவளது கையில், கால்களில், உடல்களில் சொற்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போன்றும் தோன்றியது.


அதன் பிறகு அவளை மருத்துவரிடம் அழைத்து போனார் மந்திரமூர்த்தி. அவள் கலக்கத்துடன் தனக்குப் பயமாக இருப்பதாகச் சொன்னாள். ஒருவார காலம் உறங்குவதற்கு மாத்திரைகள் தந்து அனுப்பினார் மருத்துவர். கண்களை அழுத்தும் உறக்கத்தின் ஊடாக கூட ஒரு நிழலைப் போல அவர் பிழைத் திருத்திக் கொண்டிருப்பது அவளுக்கு தெரியும். அழுவதற்கு கூட முடியாமல் அவள் உறங்கி போய்விடுவாள்.


ஒரு ஆண்டுகாலம் அவளைச் சொஸ்தப்படுத்துவதற்காக வாரம் தோறும் பொதுமருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படியான சூழ்நிலை உருவானது. அவள் மௌனமாகத் தெருவில் நடந்து வருவாள். மருத்துவமனை வரும் வரை அவர் எதுவும் பேசிக் கொள்ளவே மாட்டார். புறநோயாளிகள் பிரிவில் அவளை உட்கார வைத்துவிட்டு அவர் எதிரில் இருந்த வாகை மரத்தை வெறித்துப் பார்த்தபடியிருப்பார்.


வெள்ளை, மஞ்சள் நிற மாத்திரைகள் சகிதமாக அவர்கள் வீடு திரும்பிய மறுநிமிசம் அவர் தனது அச்சகத்திற்கு புறப்பட்டு போய்விடுவார். மாத்திரைகளில் கூட ஏதோ பெயர்கள் அச்சடிக்கபட்டிருக்கின்றன. அந்த பெயர்கள் பிழை திருத்தப்பட்டதா இல்லை திருத்தபடாததா என்ற உற்று பார்த்து கொண்டிருப்பாள். மாத்திரைகள் வயிற்றில் கரைந்து போகும் போது இந்த பெயர்களும் தனக்குள் கரைந்து போய்விடும் இல்லையா என்று யோசனை எழும். அவள் கண்களை மூடிக் கொண்டு மாத்திரையை விழுங்குவாள்.


காகிதங்கள் மெல்ல அவளுக்கு வெறுப்பையும் கோபத்தையும் வளர்த்து கொண்டேயிருந்தன. உலகில் உள்ள எல்லா அச்சு எழுத்துக்களையும் அழித்துவிட விரும்பியது போல அவள் ஆவேசப்படத் துவங்கினாள். இதற்காக அவரோடு பேசுவதையும் அவள் தவிர்த்து வந்தாள். எப்போதாவது அவர் தண்ணீர் கேட்கும் போது கூட அவள் அந்த சொல்லைக் கேட்டதேயில்லை என்பது போல அவரைப் பார்த்தபடியே இருப்பாள். அவராக எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்து கொள்வார்


இரவுகளில் உறங்க மனதற்கு அவள் பாயில் உட்கார்ந்துகொண்டேயிருப்பதை அவர் கவனித்த போது கூட தன் வேலையை நிறுத்த மாட்டார். ஒரு நாள் அவள் அவரது முதுகின் பின்னால் வந்து நின்றபடியே அவரது வேலையைக் கவனிக்க துவங்கினாள். ஆவேசமாக மிருகம் ஒன்று தனது இரையை வேட்டையாடுவதை போல அவர் சொற்களை தன் கையில் உள்ள பென்சிலால் அடித்தும் திருத்தியும் மாற்றிக் கொண்டேயிருந்தார்.


அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்


காகிதத்தில் அப்படி என்னதானிருக்கிறது ?


அவர் திரும்பி பார்க்காமலே எனக்குத் தெரியவில்லை என்றார். அவள் காகிதங்களை உற்றுப் பார்த்தபோது வார்த்தைகள் உடைந்தும் விலகியும் தனியே நடனமாடுவது போலிருந்தது. திடீரென அவரை கட்டிக் கொண்டு அழுத்துவங்கினாள். அவரது கையில் இருந்த பென்சில் தவறி கிழே விழுந்து முனை உடைந்தது.


அவர் அவளது கைகளை விலக்கி விட்டுக் கிழே கிடந்த பென்சிலை எடுத்து மிக கவனமாகச் சீவத் துவங்கினார். அவர் முன்பு ஆயிரம் பக்க புத்தகம் ஒன்று பிழைத் திருத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. தங்கம்மாளின் அழுகை வீடெங்கும் கரைந்து ஒடிக்கொண்டிருந்தது.


***


-உயிர்மை இதழில் வெளியானது.

No comments:

Post a Comment