Monday, August 31, 2009

தொப்பி-எம்.ஜி.ஆர்

எங்களூரில் காந்தாராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்கு நடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள்; ஒன்றில் மலையாளப் படம் என்பதால், எம்.ஜி.ஆர். வேறு வழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் மூன்று வகை நடிப்புகளை வெளிப் படுத்துவார். நெளிந்து நின்று கீழு தட்டைக் கடித்து அரைப் புன்னகை யுடன் மேலும் கீழும் பார்ப்பது… கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒரு பக்கமாக விலக்கி கேமராவைப் பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்துச் செல்லும் (ஷாட் முடிந்த பின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணெய் போட்டு சுளுக்கு எடுப்பார்களாமே!) கதா நாயகிக்குப் பின்னால் துள்ளி ஓடுவது… இதைத் தவிரவும் பல சிட்டுக் குருவித்தனங்கள்!

எம்.ஜி.ஆர். தமிழ்ப் பண்பாடு தவறுவதில்லை. (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை) பாட்டில் கதாநாயகியைப் புல் தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து, மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்றால் மழையில் நனையவைத்து, கேமரா பக்கவாட்டில் இருக்கிற தென்றால் முந்தானையைப் பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடை பிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பது போல வளைத்து, அவளைப் பூச்செடி களுக்குப் பின்னால் இட்டுச் சென்று, இரு பூக்களை ஒன்றோ டொன்று உரசவைத்து, பாறை மேல் படுக்கவைத்து, மேலேறிப் படுத்து நாஸ்தி செய்தாலும், பாட்டு இல்லாதபோது பண்பாக ‘அதெல்லாம் கையானத்துக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ!’ என்றுதானே அவர் சொல்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. ‘ஆண்ட வன் உலகத்தின் முதலாளி… அவனுக்கு நானொரு தொழி லாளி!’ அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போ தைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. ‘தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுப் புத்தகத்தில் பொதுவாகப் பிழைகள் அதிகம். ஆகவே, உள்ளூர் தமிழறிஞரான நான் அதைக் ‘கஞ்சியிலே’ என்று திருத்தினேன். அப்படியானால் ‘படித்தேன்’ தவறுதானே? குடித்தேன் என்று ஆக்கியபோது, சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர், ”அது செரிதேண்டே மக்கா..! கஞ்சித் தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்கு அமிருதம்லா கஞ்சி? பதார்த்தகுண சிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க…” என்றார்.

எம்.ஜி.யாரின் பேச்சு வேறு எங்களுக்குப் புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர். சொன்னாராம்… ‘உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு. பம்பு இல்லை.’ ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துப்போய், பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது, ‘படிப்பு இருக்கிறது, பண்பு இல்லை’ என்று. அதேபோல காதல் வசனங்கள்… ”கமலா, நீ என்னைத் தப்பா புழிஞ்சுக்கிட்டே (அடிப்பாவி) என்னைக் கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்.” பொன்மொழிகளும் சிக்க லானவை… ‘தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு!’ தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சு மேல் ஏறினால் போதுமா? ‘அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா! தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க. உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்ய மாட்டான்.’ எங்களூரில் அப்பி என் றால், சின்னப்பிள்ளை கொல்லைக் குப் போவது என்றொரு பொருள் உண்டு.

ஆனால், ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக் குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ்ப் படத்தைக்கூடப் பத்து நிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். படங்களை பெரும்பாலும் கடைசி வரை பார்க்க முடிகிறது, அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன்! திரைக்கதை பற்றிக் கற்ற பின், இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வணிகத் திரைக்கதை ‘எங்க வீட்டுப் பிள்ளை’

No comments:

Post a Comment