Saturday, June 13, 2009

தமயந்தி


கயிற்று ஊஞ்சல்

ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். நகரை விலக்கிய சிறிய கிராமம் ஒன்றின் மரங்கள் அடர்ந்த பகுதியில் தனித்திருந்தது. உள்ளே நுழைகையில் இலைகளுக்குள் ஒளிந்துகொண்டு பறவைகள் சப்தமிடுகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்தார்கள். காப்பகத்துக்குள் நுழைந்தபோது, அது மாலை பிரார்த்தனை நேரம்.



பனிச் சிற்பங்களைப் போல உறைந்துபோன நிசப்தத்தில் முதியவர்கள் வணங்கியபடி நின்றிருந்தனர். உதடுகள்கூட அசையவில்லை. பிரார்த்தனைப் பாடலைப் பாடும் பெண்ணின் குரல் நடுங்கிக்கொண்டு இருந்தது. பிரார்த்தனை முடிந்து வெளியேறும் பலரது கண்கள் கசிந்திருந்தன. அழுதிருக்கிறார்கள். அதைத் துடைத்துக்கொள்ளக்கூட மனதற்று நெற்றி நிறைய திருநீறும் வேதனையை அடக்கிய முகமுமாக அவர்கள் மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள்.

அநேகமாக அவர்களைத் தேடிப் பார்வையாளர்கள் வருவது வெகு அபூர்வம் என்பது புரிந்தது. குழந்தைகள் ஒருவரையருவர் இடித்துக்கொண்டு உட்காருவதுபோல நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக்கொண்டபோது, ஒன்றிரண்டு முகங்களில் வயதை மீறி கூச்சமும் வெட்கமும் கலந்து வெளிப் பட்டது.

என்ன பேசுவது என்று தெரியவில்லை. மாலை வெயில் மரங்களுக்கிடையில் கசிந்துகொண்டு இருந்தது. ரெம்ப்ராண்டின் ஓவியம் ஒன்றின் முன் அமர்ந்திருப்பது போல, இமைக்காத கண்களும் சலனமற்ற முகமுமாக என் முன் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தேன். பெரும்பான்மையான முதியவர்களின் கண்கள் உலர்ந்துபோயிருந்தன.

பேச்சை எங்கிருந்து துவங்குவது என்று யாருக்கும் தெரியவில்லை. எதையோ மறந்துபோனவரைப் போல ஒரு முதியவர் தன் அறைக்குள் சென்று, கண்ணில் விடும் சொட்டு மருந்தை எடுத்து வந்து இன்னொரு வயோதிகரிடம் தந்தார். அவரும் பாட்டிலைத் திறந்து சொட்டு மருந்து போட்டுவிட்டார். பிறகு இருவரும் பால்யத்திலிருந்து பழகி வந்த இரண்டு சிறார்களைப் போல ஒருவர் தோள் மீது மற்றவர் கையைப் போட்டுக் கொண்டு அமர்ந்தனர்.


எங்கிருந்தோ ஒரு மயில் அகவும் ஓசை கேட்டது. முதல்முறையாக ஒரு பாட்டி லேசான புன்னகையோடு சொன்னார்... ‘‘மயிலு சார்!’’ மற்றவர் களும் தலையாட்டிக்கொண்டார் கள். ஆனால், பேச்சு துளிர்க்கவே இல்லை. தண்ணீர் வற்றிப்போன கிணற்றைப் போல சொற்களும் மனதில் வற்றிப் போய்விட்டனவா?

மரத்தடியில் அமர்ந்திருந்த பெண் களில் ஒரேயருவர் மட்டும் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயமளவு குங்குமம் வைத்திருந்தார். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே இருந்தார். அவரது பெயரைக் கேட்டபோதும் தரை பார்த்தபடியே பதில் சொன்னார்.

நரைத்த தலையும் சாந்தமான முகமுமாயிருந்த ஒரு பெண்மணி மட்டும் எழுந்து நின்று, பாதி மலையாளம் கலந்த தமிழில் சொன்னார்... ÔÔநான் பாரத் சர்க்கஸில் வேலை செய்தவளாக் கும். எங்க சர்க்கஸ் பல நாடுகள் சுற்றி வந்திருக்கு. எந்தெந்த தேசம் என்று பெயர் மறந்துபோச்சு. பார் விளையாடுறதுல நான் எக்ஸ்பர்ட். பன்னிரண்டு வயசிலே சர்க்கஸ்ல சேர்ந்தது. இருபத்தஞ்சு வருசம் அதில இருந்தாச்சி... இப்பவும் கயிற்றிலே நல்லா ஆடுவேன். ஆனா, வயசாகி தலை நரைச்சவள் பார் ஆடுறதை யார் பாக்கிறது சொல்லுங்கோ... அதான் என்னை வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. சர்க்கஸ்ல இருந்துட்டதால சொந்தம் பந்தம் எல்லாம் விட்டுப் போயாச்சு. அதுனால, வெளியே வந்தப்புறம் எங்கே போறதுன்னு தெரியலை. சர்க்கஸ் கயிற்றிலே ஊஞ்சலாடினப்பகூட பயமா இல்லை. ஆனா, அங்கிருந்து வெளியே வந்தப்புறம்தான் பயம்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சது. யார் வீட்லயும் இருக்க முடியலை. எங்கே போறதுன்னும் தெரியலை. அதான் இங்கே வந்து சேர்ந் துட்டேன். சர்க்கஸ்ல ட்ரெயினிங் எடுத்த வளாக்கும்! ஒரு நோய்நொடி கிடையாது. ஆயிரம் தடவை கை தட்டு வாங்கியிருக்கேன். இப்போ எனக்குன்னு யாருமில்லை. தனியா என் கையை நானே தட்டிக்கிட வேண்டியதுதான்’’ & பேச்சைப் பாதியில் நிறுத்திக்கொண்டு, அமைதியாகி விட்டார். மிருகங்களுக்குக்கூட அடைந்து கிடக்க ஒரு கூண்டு இருக்கிறது. ஆனால், சர்க்கஸில் வேலை செய்து வெளியேற்றப்பட்டவளுக்கு போக்கிடமில்லை என்பது மனதை உறுத்துவதாக இருந்தது. இருட்டு ஒரு புகையைப் போல எங்கும் பரவத் துவங்கியது. அவர்கள் மரத்தடியிலிருந்து கலைந்து போகத் துவங்கினார்கள்.

உள்ளே வரிசையாக படுக்கைகள் போடப்பட்டு இருந்தன. சிறிய மரக் கட்டில், அதன் ஓரத்தில் சிறிய மர அலமாரி. அதில் துவைத்து மடித்துவைத்த துணிகள். ஒரு மெழுகுவத்தி, தீப்பெட்டி. கொசுவத்திச் சுருள். நாலைந்து பழைய கடிதங்கள். அழுகைக் கறை படிந்த தலையணைகள். விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அவரவர் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டார்கள். இன்றைய நாள் முடியப்போகிறது. ஒவ்வொரு நாளையும் அவர்கள் மனதுக்குள்ளாகக் கணக்கெடுத்துக் கொள்கிறார்கள். உறக்கமும் விழிப்புமற்ற ஒரு சயன நிலையில் அவர்கள் கண்கள் சொருகியிருக்கின்றன.

காப்பகத்தின் நிர்வாகி அனைவரை யும் சாப்பிட அழைத்தார். நிழல்களைப் போல அவர்கள் நடந்து போகிறார்கள். உணவருந்தும் சப்தம்கூட கேட்கவில்லை. பின் மெதுவாக படுக்கைக்குத் திரும்பு கிறார்கள். ப்ளாக்போர்டில் ஈரத் துணியை வைத்து அழித்தபடியே நிர்வாகி சில பெயர்களை எழுதுகிறார். அது என்னவென்று கேட்டபோது, ÔÔஒவ்வொரு நாளும் சிலர் மௌன விரதம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதன்படி, நாளைக்கு மௌன விரதம் இருப்பவர்களின் பெயர்கள் இவைÕÕ என்று சொன்னார்.

ஏற்கனவே மௌனத்தின் தாழிக்குள் வீழ்ந்து கிடப்பவர்கள்தானே, இனி எதற்காக தனியே ஒரு நாள் மௌன விரதம் என்று கேட்க நினைத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தபோது நாள் முடிந்து இரவின் நீண்ட பொழுதுக்குள் யாவரும் ஒடுங்கிக் கொண்டு விட்டார்கள். உறக்கத்தில் அவர்களுக்குக் கனவுகள் வருமா? நிச்சயமாகத் தெரியவில்லை.

பிரார்த்தனைகளும் மௌன விரதமும் அவர்களுக்கு என்ன தந்துவிட முடியும்? அவர்கள் யாசிப்பது சாப்பாட்டை அல்ல, மனித உறவை! அதுவும் ஒரே ஒரு ஆள் தன்னைப் புரிந்தவர் இருந்தால்கூடப் போதும், சமாதானமாகி விடுவார்கள். ஆனால், அதுகூடச் சாத்தியமாவதில்லை.

ஒரு மனிதனைப் புறக்கணிப்பதும், தனிமைப்படுத்திவிடுவதும்தான் அவனுக்குத் தரும் மாபெரும் தண்டனை. மகாபாரதத்தில்கூட கௌரவ சேனையின் கடைசி ஆளாக மிஞ்சும் அஸ்வத்தாமா, பாஞ்சாலியின் ஐந்து பிள்ளைகளையும் கொன்று விடுகிறான். உத்திரையின் கர்ப்பத்திலிருக்கும் சிசுவின் மீதுகூட அம்பு எய்கிறான். அவனுக்குக் கிடைக் கும் தண்டனை விசித்திரமானது.

உலகில் நண்பர்கள் யாருமற்றுப் போய், சாவும் இல்லாமல் அவன் சுற்றியலைய வேண்டும் என்று சாபம். வில்லாளிகளில் இந்திரனுக்குச் சமமானவனும் துரோணரின் புத்திரனு மான அஸ்வத்தாமா, இந்த கடுமையான தண்டனையைச் சுமந்துகொண்டு சாவை விலக்கியவனாக தனிமையில் இன்றும் அலைந்துகொண்டு இருக்கிறான் என்கிறது மகாபாரதம்.

சிறுவயதில் நமக்கிருந்த பிரச்னை தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிடுவது. முதுமையிலும் அதுதான் பிரச்னை என்று மார்க் ட்வைன் ஒரு முறை எழுதியிருந்தார். நிஜம்தானே! குழந்தை கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் கவனத்தை ஈர்த்துக்கொண்டு விடுகின்றன. முதுமையில் அதற்கும் சாத்தியமில்லை. இந்தத் தனிமைக்குப் பயந்துதான் பல வயோதிகர்கள் அவமானங்களைச் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிடு கிறார்கள். குடும்பங்களில் குழந்தை கள் அளவுக்கு வயோதிகர்களும் வசையும் திட்டும் வாங்குவது அன்றாடமாகிவிட்டது.

வாழ்வுக்கான போராட்டம் சிக்கலாகத் துவங்கியதும் உறவுகளும் நம்மைச் சுற்றிய மனிதர்களுடன் உள்ள நெருக்கமும் சிக்கலாகிவிடு கின்றன. இதைத் தனது கதையன்றின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமயந்தி. இவரது Ôஅனல்மின் நிலையங்கள்Õ என்னும் கதை குடும்ப உறவுகளின் உண்மையான முகங்களை வெளிப்படுத்துகிறது. தமயந்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் தீவிர படைப்பாளி. இவரது கதைகள் உழைக்கும் பெண்களின் போராட்டங் களைப் பிரதிபலிக்கின்றன. சுய அடையாளமற்றவளாக பெண் நடத்தப்படுவதைச் சகித்துக்கொள்ள மறுக்கும் எதிர்ப்புக் குரல் இவர் கதைகளின் அடிநாதமாக உள்ளது.

‘அனல் மின் நிலையங்கள்’ கதை ஒரு மீனவக் குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டினை விவரிக்கிறது. குறிப்பாக, தூத்துக்குடி கடற்கரையில் உருவாக்கப் பட்ட அனல்மின் நிலையத்தின் காரண மாக அங்குள்ள மீன்பிடித் தொழில் எப்படி மறைமுகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது என்பதைப் பற்றியகதை.

கடலில் ஆஷ்டைக் எனப்படும் சாம்பல் களம் அமைக்கப்பட்டு அதன் வழியாக அனல் மின் நிலையத்தின் கழிவு நீர் கடலில் கலந்துவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் காரணமாக சாம்பல் கற்கள் பாறை போலாகி இறுக்கமாகிவிடு கின்றன.

இந்தக் கழிவின் பாதிப்பால் இனப்பெருக்கமற்று மீன்கள் குறைந்தும் அழிந்தும் போய்விடு கின்றன. இதனால் அவர்களின் பிரதான மீன் பிடிப்பாக இருந்த சிங்கரால் பிடிப்பு அறவே பாதிக்கப் பட்டுவிடுகிறது. அப்படி பாதிக்கப் படும் ஒரு மீனவன்தான் செபஸ்தியான். அவனுடைய தாய்க்கு முன்பு போல வீட்டில் வளமை இல்லை என்ற குறைபாடு இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் அவள் தினமும் செபஸ்தியானின் மனைவி கிரேஸோடு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறாள்.

ஒரு நாள் கிரேஸின் அண்ணன் விருந்தாளியாக வருகிறான். அன்றும் அந்தச் சண்டை நீள்கிறது. இனிமேல் கிழவியை தங்களோடு வைத்துச் சமாளிக்க முடியாது என்று கிரேஸ் அழுது கூப்பாடு போடுகிறாள். வழியில்லாமல் செபஸ்தியான் அம்மாவைத் தன் அண்ணன் வீட்டில் கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறான். ஆனால், அம்மா போக மறுக்கிறாள். கட்டயாப்படுத்தி விருதுநகரில் உள்ள அண்ணன் வீட்டுக்கு கூட்டிப் போகிறான் செபஸ்தியான்.

அங்கே அவன் மதினி அவர்களை வீட்டுக்குள்ளேயே விட மறுக்கிறாள். என்ன செய்வது என்று மறுபடியும் அம்மாவைத் தன் வீட்டுக்கே அழைத்து வருவதற்காக பஸ் ஏறிக் கூட்டி வருகிறான். வழியில் அம்மாவின் பசிக்குத் தேவையான பிஸ்கட்டும் டீயும் வாங்கித் தருகிறான். பஸ் கோவில்பட்டிக்கு வந்து சேர்கிறது. அங்கே பஸ் ஸ்டாண்டில் அம்மாவைத் தனியே உட்கார வைத்துவிட்டு, தூத்துக்குடி பஸ் இருக்கிறதா என்று பார்த்து வருவதாகச் சொல்லி, புறப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறி அவளுக்குத் தெரியாமல் ஊருக்கு கிளம்பிவிடு கிறான் செபஸ்தியான் என்பதோடு கதை முடிந்து விடுகிறது.

பயன்படுத்தி எறிந்த காலி டப்பாக்கள், பழைய காகிதங்களுக்குக்கூட ஏதோ ஒரு விலை, மதிப்பு இருக்கிறது. ஆனால், வயோதிகத்துக்கு அந்த மதிப்புகூட இல்லாமல் போய்விட்டிருக்கிறது. காலம் வயோதிகத் தின் பட்டியலில் நம் பெயரையும் ஒரு நாள் எழுதும் என்பதை நாம் மறந்துவிடுவதுதான் காரணமா?



ஆங்கில இலக்கி யத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தமயந்தி, திருநெல்வேலிக்காரர். இவருடைய முதல் கதை 1978&ல் ஆனந்த விகடனில்வெளி யானது. தமயந்தி சிறுகதைகள் என்பது இவரதுமுதல் சிறுகதைத் தொகுப்பு, அக்கக்கா குருவிகள் என்கிறஇவரது சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமானது. தற்போது இவர் திருநெல்வேலியில் சூரியன் எஃப்.எம் வானொலியில் பணியாற்றி வருகிறார்

No comments:

Post a Comment