Monday, August 31, 2009

பிழை திருத்துபவரின் மனைவி

அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை.


காகிதங்கள் கிழிக்கபடும் போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் எதையும் வெளிப்படுத்துதில்லை. அதைக் கூட அவளால் சகித்து கொள்ள முடிவதில்லை. இதற்காக அவள் காகிதங்களை நீரில் ஊற விட்டுவிடுவாள். அவள் வரையில் அது தான் காகிதங்களுக்குத் தரப்படும் மிக மோசமான தண்டனை. சமையல் செய்யும் போது இரும்பு வாளியில் உள்ள தண்ணீரில் காகிதத்தைப் போட்டுவிட்டால் மாலை பார்க்கும் போது அது கரைந்து துகள் துகளாக மிதந்து தண்ணீரில் கலந்து போயிருக்கும்.


காகிதங்களில் கரையும் போது அதில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் எங்கே போய்விடுகின்றன. அந்த வார்த்தைகள் உப்புத் தண்ணீருக்குள் கரைந்து போய்விடுவதை போல கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போயிருக்குமா? அவள் வாளித் தண்ணீரை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். சில நேரம் யோசிக்கும் போது வியப்பாக இருக்கும்.


காகிதங்களுக்கும் வார்த்தைகளுக்குள் உள்ள உறவு எத்தகையது. காகிதங்கள் தன் மீது எழுதப்படும் வரிகளுக்கு சம்மதம் தருகிறதா என்ன? காகிதங்களுக்கும் அதில் பதிந்துள்ள சொற்களுக்கும் நடுவில் இடைவெளியிருக்கிறதா? இப்படி யோசிக்க துவங்கியதும் நான் ஏன் இது போன்ற வீண் யோசனைகளை வளர்த்து கொண்டு போகிறேன் என்று அவள் மீதே அவளுக்கு ஆத்திரமாக வரும்.


அவள் வீட்டில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் நிரம்பியிருக்கின்றன. அவள் தனது பதினேழாவது வயதில் மந்திர மூர்த்தியை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வரும் வரை பாடப்புத்தங்களைத் தவிர வேறு எதையும் கண்டதேயில்லை. அதுவும் அவளது ஊரில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இல்லை என்பதால் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டு விட்டாள்.


ஆறேழு வருடங்கள் அவள் தீப்பெட்டி ஒட்டும் வேலை, ரப்பர்கொட்டை உடைக்கும் வேலைக்கும் போய் கொண்டிருந்தாள். தீப்பெட்டி ஆபீஸில் ரேடியோ இருந்தது. அதில் ஒலிபரப்பாகும் சினிமாப் பாட்டுகள் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த நாட்களில் சீட்டு போட்டு ஒரு ரேடியோவைச் சொந்தமாக வாங்கி விடுவதற்கு அவள் ரொம்பவும் ஆசைப்பட்டாள். ஆனால் ஒவ்வொரு முறை சீட்டு எடுக்கும் போதும் ஏதாவது ஒரு செலவு வந்து சேர்ந்துவிடும். இதனால் அவள் திருமணத்தின் போது கட்டயாம் ஒரு ரேடியோ வாங்கித் தர வேண்டும் என்று வற்புறுத்தி வாங்கிக் கொண்டுவிட்டாள். ஆனால் மந்திரமூர்த்திக்கு ரேடியோ கேட்பது பிடிக்காது என்பதால் அது எப்போதுமே அணைத்து வைக்கபட்டேயிருந்தது.


திருமணமாகி சென்னைக்கு வந்த சமயத்தில் அவளுக்கு மந்திரமூர்த்தியைக் காணப் பயமாக இருக்கும். அவர் அப்போது ராயல் பதிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது பையில் ஒரு பென்சிலும் அழி ரப்பரும் எப்போதுமிருக்கும். சில நேரம் சிவப்பு மை பேனா வைத்திருப்பதை கூட கண்டிருக்கிறாள்.


அவளுக்குப் பிழை திருத்தம் செய்வது என்பதைப் பற்றி எதுவுமே தெரியாது. எப்போதாவது இரவில் மந்திரமூர்த்தி தரையில் தலையணை போட்டு படுத்தபடியே காகிதங்களில் பென்சிலால் சுழிக்கும் போது அவள் கவனமாக பார்த்து கொண்டேயிருப்பாள். அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும். சில நேரங்களில் அவர் சப்தமாகச் சிரிப்பது கூட கேட்கும். பின்னிரவு வரை அவர் பிழைத் திருத்தம் செய்து கொண்டிருப்பார். பிறகு எழுந்து பின்கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் மூத்திரம் பெய்து விட்டு உள்ளே வந்து படுத்துக் கொள்வார்


அவளது உடலில் அவரது விரல்கள் ஊரும் போது பிழை திருத்தம் செய்வது தேவையில்லாமல் நினைவிற்கு வரும். அவர் காமத்தில் பெரிய நாட்டம் கொண்டவரில்லை. அதை ஒரு சம்பிரதாயம் போல ஈடுபடுவதும், உடல் வியர்த்து போனதும் முகம் திருப்பிக் கொண்டு உறங்கி விடுவதும் அவளுக்கு எரிச்சல் ஊட்டுவதாகயிருக்கும். உறக்கத்தில் கூட சில நேரம் அவரது விரல்கள் அசைந்தபடி இருப்பதையும் முகம் இறுக்கமடைந்திருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள்.


மந்திரமூர்த்தி யாரோடும் பேசுவது கிடையாது. அவர் காலை ஆறுமணிக்கெல்லாம் பிழை திருத்தத் துவங்கிவிடுவார். திருத்திய காகிதங்களுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறி செல்லும் போது அவரது மஞ்சள் பையில் திருத்திய பிரதிகளும் மதிய உணவுமிருக்கும். அவரது அலுவலகம் ராயப்பேட்டைப் பகுதியில் இருந்தது.


அவருக்கென்று நண்பர்களோ தெரிந்தவர்களோ எவருமோயில்லை. வெளியிலும் அவர் போவது கிடையாது. அவருக்கு இருந்த ஒரே பழக்கம் வெற்றிலை போடுவது. அதற்காக சிறிய லெதர் பை ஒன்றை வைத்திருந்தார். அந்த பையில் இருந்து பத்து நிமிசத்திற்கு ஒரு முறை இரண்டுவெற்றிலைகளைக் கிள்ளி வாயில் போட்டுக் கொள்வார்.


ஒரு முறை அவளை தான் வேலை செய்யும் அச்சகத்தில் நடைபெற்ற விழாவிற்காக அழைத்துப் போயிருந்தார். அங்கே மிகப்பெரிய இயந்திரம் ஒன்றில் காகிதம் உருளையாக சுற்றப்பட்டிருப்பதையும் அந்தக் காகித உருளையிலிருந்து வெங்காயத்தில் தோல் உரிக்க உரிக்க வந்து கொண்டிருப்பது போல காகிதம் வழிந்து கொண்டேயிருப்பதையும் அவள் மிரட்சியோடு பார்த்து கொண்டிருந்தாள்.


அந்தக் காகித உருளை முழுவதும் அச்சடிக்கபட்டுவிடும். அத்தனையும் அவர் தான் பிழைத் திருத்தம் செய்ய வேண்டுமில்லையா? அவள் தன் கணவரிடம் அதைப்பற்றி கேட்டதும் அசட்டுதனமாக உளறாதே என்றபடியே அவர் பைண்டிங் செய்யும் பகுதிக்குச் சுற்றி காட்ட அழைத்து சென்றார்


அவள் வயதில் நாலைந்து பெண்கள் காகிதங்களை வரிசை வரிசையாக அடுக்கி ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கேட்டாள். மந்திரமூர்த்தி பதில் சொல்லாமல் அது நமக்கு சரிப்படாது என்றார். அச்சகத்தின் கடைசில் இருந்த கழிப்பறைக்கு அவள் போகும் போது வழியில் தரையில் காகிதங்கள் சிதறி கிடந்தன. அதன் மீது யாவரும் மிதித்து நடந்து போய் கொண்டிருந்தார்கள்.


தென்பக்கமாக ஒரு சிறிய இரும்புக் கதவு திறந்து கிடப்பதைக் கண்டாள். உள்ளே எட்டிப்பார்த்த போது கழித்து போட்ட உபயோகமற்ற காகிதங்கள் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருந்தன. அவளுக்கு பயமாக இருந்தது. நீருற்று பொங்குவதை போல காகிதங்கள் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறதா? இந்த காகிதங்கள் எல்லாம் எங்கே போய்சேரும்? அவள் கழிப்பறைக்கு போனபிறகும் அந்த யோசனையில் இருந்து விடுபட முடியாமலிருந்தாள்.


அந்த அச்சகத்தில் அவளது கணவன் ஒரு ஆள் மட்டுமே பிழை திருத்துபவராக இருந்தார் என்பது ஏன் என்று அவளுக்கு புரியவேயில்லை. ஒரு நாள் மந்திர மூர்த்தி பிழை திருத்தி வைத்திருந்த காகிதங்களை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பார்த்தாள். அநேகமாக வரிக்கு வரி தவறுகள் அடையாளம் காணப்பட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டும் அடித்து மாற்றியும் இருந்தன.


அவளுக்கு அந்தக் காகிதத்தை பார்க்கும் போது ஏதோ குழந்தை விளையாட்டு போலத் தோணியது. சில வேளைகளில் மந்திரமூர்த்தி எல்லா எழுத்தாளர்களை விடவும் மிகப்பெரிய அறிவாளி போன்று தோன்றினார். ஒரு வேளை தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லையோ என்று கூட அவளுக்கு தோணியது. அவள் பயத்தோடு அந்த காகிதத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு அவருக்கு சாப்பாடு வைத்தாள்.


மந்திரமூர்த்தியின் கண்களில் பிழைகள் எத்தனை சிறியதாக இருந்தாலும் எப்படியோ பட்டு விடுகிறது. இந்த குணம் அவருக்கு காகிதங்களோடு மட்டும் இருக்கிறதா இல்லை தன்னையும் அவர் இது போன்று நுணுக்கிப் பார்த்து கொண்டுதானிருக்கிறாரோ? ஆரம்ப நாட்களில் அவள் மாலை நேரங்களில் வீட்டு வாசல் படியில் வந்து உட்கார்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.


வீடு திரும்பும் மந்திர மூர்த்தியின் முகம் அதைக் கண்டதுமே கடுமையடைவதை அவள் கண்டிருக்கிறாள். வீடு வந்து சேர்ந்ததும் அவர் தனது பிழைத் திருத்தும் காகிதங்களை எடுத்து வைத்துக் கொள்வார். அவள் தரும் காபியோ, காரத்தையோ அவர் எப்போது சாப்பிடுகிறார் என்று கூட தெரியாது. ஏன் அவர் இப்படி எழுத்துக்களுக்குள் தன்னை முடக்கிக் கொண்டுவிட்டார் என்று குழப்பமாக இருக்கும்.


மந்திரமூர்த்திக்கு உணவில் கூட அதிக கவனமிருப்பதில்லை. ஈர வேஷ்டியை கூட சில நேரங்களில் அணிந்து கொண்டு புறப்பட்டு போகின்றவராகயிருந்தார். எப்போதாது அவள் தயக்கத்துடன் அவர் வேறு வேலை ஏதாவது பார்க்க கூடாதா என்று கேட்கும் போது அவர் முறைத்தபடியே இந்த வேலையில் என்ன பிரச்சனை என்று கேட்பார். அவளால் விளக்கி சொல்ல முடியாது.


மந்திரமூர்த்தி அச்சகத்திற்கு செல்லாமல் ஒரு நாளும் இருந்ததே கிடையாது. அவள் உடல் நலமற்று கிடந்த நாட்களில் கூட கஞ்சி வைத்துக் கொடுத்துவிட்டு அவர் அச்சகத்திற்கு கிளம்பி போய்விடுவார். பாயில் கிடந்தபடியே அவள் பல்லைகடித்து கொண்டுகிடப்பாள். எதற்காக இதை போன்ற ஒருவரை தான் திருமணம் செய்து கொண்டோம். ஒரு எழுத்து மாறி போகின்றதைப் பற்றி கவலைப்படும் ஒரு நபர் தன்னை ஏன் கவனிக்க மறந்து போகிறார் என்று ஆத்திரமாக வரும்.


மந்திரமூர்த்தி அதைப் பற்றி யோசிப்பதேயில்லை. எப்போதாவது அவராக சினிமாவிற்கு போய்வரலாம் என்று சொல்வார். அது போன்ற நேரங்களில் அவள் அவசரமாக புடவையை மாற்றிக் கொண்டு வெளியே வருவாள். திரையரங்கத்தின் வாசலில் நின்றபடியே போஸ்டர்களில் உள்ள எழுத்துக்களை, வேர்கடைலை மடித்து தரும் காகிதங்களை கூட அவர் உன்னிப்பாகக் கவனிப்பதையும் அவரது உதடுகள் தவறுகளை முணுமுணுப்பதையும் அவளால் கேட்க முடிந்திருக்கிறது.


சினிமா தியேட்டரில் அவர் சிரித்து அவள் கண்டதேயில்லை. எப்போதும் தீராத யோசனையுடன் அவரது முகம் உறைந்து போயிருக்கும். சினிமா முடிந்த மறுநிமிசமே வீடு திரும்பிவிட வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த பதட்டமாக இருக்கும். சினிமா பார்த்த வந்த இரவுகளில் அவர் அவளோடு உறவு கொள்வது கிடையாது என்பது ஏன் என அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை


அவர்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டிருந்தது. இப்போது வரை குழந்தைகளில்லை. அவள் தனியாகவே வீட்டிலிருந்து பழகி விட்டிருந்தாள். எப்போதாவது அவளாக ஒரு எலுமிச்சைபழத்தை கையில் எடுத்துக் கொண்டு நடந்தே தட்சணாமூர்த்தியை தரிசிப்பதற்காகச் சென்று வருவாள்.


அது போன்ற நேரங்களில் அவள் கடவுளிடம் என்ன வேண்டுவது என்பது கூட அவளுக்கு மறந்து போயிருந்தது. சில நேரங்களில் சன்னதியின் முன்பாக நின்று கொண்டு கடவுளை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். ஆத்திரமாகும் நாட்களில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் யாவும் உலகிலிருந்து ஒழிந்து போய்விட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வாள். அவளது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து பென்சில்களின் மீது. ரப்பரின் மீது என நீண்டு கொண்டே போனது.


இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் பகலில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த காகிதங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கிழித்தபடியே இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய மந்திர மூர்த்தி காகிதங்கள் இறைந்து கிடந்த அறையை கண்டதும் சற்றே கோபமான குரலில் தங்கம்மா.. உனக்கு பேப்பரை கிழிக்க ஆசையிருந்தால் குப்பை தொட்டிக்கு போ .அங்கே நிறைய கிடக்கும். இன்னொரு தடவை இது போல செய்யாதே என்றபடியே அவர் தனது மேஜையில் உட்கார்ந்து கொண்டு பையில் இருந்த காகிதங்களை பிழை திருத்தம் செய்ய துவங்கினார்.


அவள் சப்தமாகக் கத்தி அழுதாள். அந்த சப்தம் அவருக்கு கேட்டதாகவே தெரியவில்லை. அவர் திருத்திய காகிதங்களைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அவள் உறங்கவேயில்லை. அவளுக்குக் காகிதங்களில் இருந்து சொற்கள் உதிர்ந்து விழுவது போன்றும் அவளது கையில், கால்களில், உடல்களில் சொற்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போன்றும் தோன்றியது.


அதன் பிறகு அவளை மருத்துவரிடம் அழைத்து போனார் மந்திரமூர்த்தி. அவள் கலக்கத்துடன் தனக்குப் பயமாக இருப்பதாகச் சொன்னாள். ஒருவார காலம் உறங்குவதற்கு மாத்திரைகள் தந்து அனுப்பினார் மருத்துவர். கண்களை அழுத்தும் உறக்கத்தின் ஊடாக கூட ஒரு நிழலைப் போல அவர் பிழைத் திருத்திக் கொண்டிருப்பது அவளுக்கு தெரியும். அழுவதற்கு கூட முடியாமல் அவள் உறங்கி போய்விடுவாள்.


ஒரு ஆண்டுகாலம் அவளைச் சொஸ்தப்படுத்துவதற்காக வாரம் தோறும் பொதுமருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படியான சூழ்நிலை உருவானது. அவள் மௌனமாகத் தெருவில் நடந்து வருவாள். மருத்துவமனை வரும் வரை அவர் எதுவும் பேசிக் கொள்ளவே மாட்டார். புறநோயாளிகள் பிரிவில் அவளை உட்கார வைத்துவிட்டு அவர் எதிரில் இருந்த வாகை மரத்தை வெறித்துப் பார்த்தபடியிருப்பார்.


வெள்ளை, மஞ்சள் நிற மாத்திரைகள் சகிதமாக அவர்கள் வீடு திரும்பிய மறுநிமிசம் அவர் தனது அச்சகத்திற்கு புறப்பட்டு போய்விடுவார். மாத்திரைகளில் கூட ஏதோ பெயர்கள் அச்சடிக்கபட்டிருக்கின்றன. அந்த பெயர்கள் பிழை திருத்தப்பட்டதா இல்லை திருத்தபடாததா என்ற உற்று பார்த்து கொண்டிருப்பாள். மாத்திரைகள் வயிற்றில் கரைந்து போகும் போது இந்த பெயர்களும் தனக்குள் கரைந்து போய்விடும் இல்லையா என்று யோசனை எழும். அவள் கண்களை மூடிக் கொண்டு மாத்திரையை விழுங்குவாள்.


காகிதங்கள் மெல்ல அவளுக்கு வெறுப்பையும் கோபத்தையும் வளர்த்து கொண்டேயிருந்தன. உலகில் உள்ள எல்லா அச்சு எழுத்துக்களையும் அழித்துவிட விரும்பியது போல அவள் ஆவேசப்படத் துவங்கினாள். இதற்காக அவரோடு பேசுவதையும் அவள் தவிர்த்து வந்தாள். எப்போதாவது அவர் தண்ணீர் கேட்கும் போது கூட அவள் அந்த சொல்லைக் கேட்டதேயில்லை என்பது போல அவரைப் பார்த்தபடியே இருப்பாள். அவராக எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்து கொள்வார்


இரவுகளில் உறங்க மனதற்கு அவள் பாயில் உட்கார்ந்துகொண்டேயிருப்பதை அவர் கவனித்த போது கூட தன் வேலையை நிறுத்த மாட்டார். ஒரு நாள் அவள் அவரது முதுகின் பின்னால் வந்து நின்றபடியே அவரது வேலையைக் கவனிக்க துவங்கினாள். ஆவேசமாக மிருகம் ஒன்று தனது இரையை வேட்டையாடுவதை போல அவர் சொற்களை தன் கையில் உள்ள பென்சிலால் அடித்தும் திருத்தியும் மாற்றிக் கொண்டேயிருந்தார்.


அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்


காகிதத்தில் அப்படி என்னதானிருக்கிறது ?


அவர் திரும்பி பார்க்காமலே எனக்குத் தெரியவில்லை என்றார். அவள் காகிதங்களை உற்றுப் பார்த்தபோது வார்த்தைகள் உடைந்தும் விலகியும் தனியே நடனமாடுவது போலிருந்தது. திடீரென அவரை கட்டிக் கொண்டு அழுத்துவங்கினாள். அவரது கையில் இருந்த பென்சில் தவறி கிழே விழுந்து முனை உடைந்தது.


அவர் அவளது கைகளை விலக்கி விட்டுக் கிழே கிடந்த பென்சிலை எடுத்து மிக கவனமாகச் சீவத் துவங்கினார். அவர் முன்பு ஆயிரம் பக்க புத்தகம் ஒன்று பிழைத் திருத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. தங்கம்மாளின் அழுகை வீடெங்கும் கரைந்து ஒடிக்கொண்டிருந்தது.


***


-உயிர்மை இதழில் வெளியானது.

தொப்பி-எம்.ஜி.ஆர்

எங்களூரில் காந்தாராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்கு நடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள்; ஒன்றில் மலையாளப் படம் என்பதால், எம்.ஜி.ஆர். வேறு வழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் மூன்று வகை நடிப்புகளை வெளிப் படுத்துவார். நெளிந்து நின்று கீழு தட்டைக் கடித்து அரைப் புன்னகை யுடன் மேலும் கீழும் பார்ப்பது… கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒரு பக்கமாக விலக்கி கேமராவைப் பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்துச் செல்லும் (ஷாட் முடிந்த பின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணெய் போட்டு சுளுக்கு எடுப்பார்களாமே!) கதா நாயகிக்குப் பின்னால் துள்ளி ஓடுவது… இதைத் தவிரவும் பல சிட்டுக் குருவித்தனங்கள்!

எம்.ஜி.ஆர். தமிழ்ப் பண்பாடு தவறுவதில்லை. (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை) பாட்டில் கதாநாயகியைப் புல் தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து, மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்றால் மழையில் நனையவைத்து, கேமரா பக்கவாட்டில் இருக்கிற தென்றால் முந்தானையைப் பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடை பிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பது போல வளைத்து, அவளைப் பூச்செடி களுக்குப் பின்னால் இட்டுச் சென்று, இரு பூக்களை ஒன்றோ டொன்று உரசவைத்து, பாறை மேல் படுக்கவைத்து, மேலேறிப் படுத்து நாஸ்தி செய்தாலும், பாட்டு இல்லாதபோது பண்பாக ‘அதெல்லாம் கையானத்துக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ!’ என்றுதானே அவர் சொல்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. ‘ஆண்ட வன் உலகத்தின் முதலாளி… அவனுக்கு நானொரு தொழி லாளி!’ அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போ தைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. ‘தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுப் புத்தகத்தில் பொதுவாகப் பிழைகள் அதிகம். ஆகவே, உள்ளூர் தமிழறிஞரான நான் அதைக் ‘கஞ்சியிலே’ என்று திருத்தினேன். அப்படியானால் ‘படித்தேன்’ தவறுதானே? குடித்தேன் என்று ஆக்கியபோது, சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர், ”அது செரிதேண்டே மக்கா..! கஞ்சித் தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்கு அமிருதம்லா கஞ்சி? பதார்த்தகுண சிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க…” என்றார்.

எம்.ஜி.யாரின் பேச்சு வேறு எங்களுக்குப் புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர். சொன்னாராம்… ‘உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு. பம்பு இல்லை.’ ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துப்போய், பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது, ‘படிப்பு இருக்கிறது, பண்பு இல்லை’ என்று. அதேபோல காதல் வசனங்கள்… ”கமலா, நீ என்னைத் தப்பா புழிஞ்சுக்கிட்டே (அடிப்பாவி) என்னைக் கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்.” பொன்மொழிகளும் சிக்க லானவை… ‘தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு!’ தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சு மேல் ஏறினால் போதுமா? ‘அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா! தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க. உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்ய மாட்டான்.’ எங்களூரில் அப்பி என் றால், சின்னப்பிள்ளை கொல்லைக் குப் போவது என்றொரு பொருள் உண்டு.

ஆனால், ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக் குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ்ப் படத்தைக்கூடப் பத்து நிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். படங்களை பெரும்பாலும் கடைசி வரை பார்க்க முடிகிறது, அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன்! திரைக்கதை பற்றிக் கற்ற பின், இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வணிகத் திரைக்கதை ‘எங்க வீட்டுப் பிள்ளை’

திலகம் -சிவாஜி

‘…சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். ‘அவன்தான் மனிதன்’ என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். ‘வைக்கோலு பிடுங்கு கான்’ என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. ‘சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே… அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?’…

உச்சம் ‘திரிசூலம்’. அதில் மூன்று நடிப்பு. இரு கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்குப் பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத் தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத் துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு (சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியைக் காட்ட மாட்டார்கள். ஊகம்தான்!) சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர் பார்க்கப்படுவது போலவே உதடுகள் துடிக்கும், கன்னம் அதிரும்…

உச்சகட்ட நடிப்பு… ‘பகைவர் களே ஓடுங்கள், புலிகள் இரண்டு வருகின்றன…’ என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. ‘தென்னாட்டு மார்லன் பிராண்டோ’ என்று சிவாஜியை இதன் பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.’

Saturday, June 13, 2009

முதன் முதலாய் அம்மாவுக்கு

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போபபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- கவிப்பேரரசு வைரமுத்து.

ஜி.நாகராஜன்

பொய் சிரிப்பு
நேற்று பிற்பகலில் ஓர் இளம்பெண் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்து பார்த்தபோது, அவளுக்கு இருபது வயது இருக்கும். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஒரு ஐஸ்கிரீமை விற்பதற்காக கூல்பாக்ஸ் நிறைய கொண்டு வந்திருந்தாள். வெயிலில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கக்கூடும். அவளால் கோவையாகப் பேசக்கூட முடியவில்லை. நா வறட்சியுடன், கலைந்த தனது தலையைச் சரிசெய்தபடி, பழக்கப்படுத்தப்பட்ட கிளி பேசுவதுபோல விவரங்களை கடகடவென ஒப்பித்தாள். நான் சிரித்துக்கொண்டே,‘தண்ணீர் குடிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவள் தலையசைத்தாள்.
ஜில்லென்று குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கடகடவெனக் குடித்தாள். தண்ணீர் அவளது கழுத்திலிருந்து வழிந்தோடியது. இப்போது முகத்தில் சிரிப்பு துளிர்க்கத் துவங்கியது. விற்பனைப் பெண்களுக்கு என்றே ஒரு சிரிப்பு இருக்கிறது. அல்லது, அவர்கள் அப்படி சிரிக்கப் பழக்கப் படுத்தப்படுகிறார்கள். அந்தச் சிரிப்பு ஒரு காகிதத்தில் வரையப்பட்ட சித்திரம் போல அளவாகவும், சரியாகத் தோன்றி சரியாக நிறுத்தப்படு வதாகவும் இருக்கும். அதைப் பார்க்கும்போது, எவ்வளவு மில்லி மீட்டர் வாயைத் திறந்து எப்படிச் சிரிக்க வேண்டும் என்றுகூட பழக்கிவிடுகிறார் களோ என்று சற்று ஆத்திரமாக வும் இருக்கும்.
ஆனால், என் முன் நிற்பவள் முகத்தில் சிரிப்பு, பாலில் ஆடை மிதந்துகொண்டு இருப்பது போல உதட்டோடு ஒட்டி இருந் தது. வீட்டில் யாருமில்லையோ என்பதைக் கண்டுகொண்டவள் போல, ‘ஊருக்குப் போயிருக் காங்களா சார்?’ என்று கேட்டாள். தலையாட்டினேன். அவள் பார்வையில் நாற்காலி யில் கிடந்த புத்தகம் கண்ணில் பட்டிருக்க வேண்டும். தலை யைக் கோதியபடியே, ‘அந்த புக்கை பார்க்கலாமா?’ என்று கேட்டாள்.
நான் அந்தப் புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத் தேன். அது ஆதவனின் காகித மலர்கள். அவள் மிக ஆசையுடன் அதைப் புரட்டிப் பார்த்தபடி, ‘எனக்கு தி.ஜானகிராமன் எழுத்து ரொம்பப் பிடிக்கும் சார். படிச்சிருக்கேன்’ என்றபடி, அடுத்து எங்கே போவது என்று யோசித்தாள். ஆச்சர்ய மாக இருந்தது. தி.ஜானகிராமன் படித்த விற்பனைப் பிரதிநிதி ஒருத்தியை முதல்முறையாகச் சந்திக்கிறேன். அவ ளிடம் ஏனோ பேச வேண்டும் போல இருந்தது. ‘உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்குமா?’ என்று கேட்டேன்.
இதை எதிர்பாராத அவள், குடத்து தண்ணீர் விளிம்புக்கு உள்ளாகவே ததும்பிக் கொள்வது போன்று உதட்டுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு சிரித்த படியே, ‘இது தொழில் சார்! எனக்கு டீ குடிக்கத்தான் பிடிக்கும்’ என்றாள். ‘ஆமாம், இந்த வெயிலில் டீ குடிப்பது இதமாகத்தான் இருக்கும்’ என்று நான் சொன்னதும், உதட்டில் கரை தட்டி நின்ற சிரிப்பு வெளிப்பட்டு விட்டது. Ôஇப்போ இல்லை சார்! சாயங்காலம் குடிப் பேன். ஆனா, வழியில எங்கா வது டீக்கடையில நின்னு டீ குடிக்கலாம்னா ஒரே தொல்லையா இருக்கு. பொம்பளை ரோட்ல நின்னு டீ குடிக்கக் கூடாதாம். ஓட்டல்ல போயி காபி சாப்பிடச் சொல்றாங்க. இவங்க அசிங்கமா ரோட்ல நின்னு ஒண்ணுக்குப் போறது தப்பில்லையாம். நாங்க டீ குடிச்சா தப்பாம்!Õ என்றாள்.
அந்தக் கோபம் உண்மையாக இருந்தது. உண்மை தானே! கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்சார வேலி பெண்களை நுழையவிடா மல் எத்தனையோ இடங் களில் தடுத்துக்கொண்டு தானே இருக்கிறது! விற்ப னைப் பெண் தயங்கித் தயங்கிக் கேட்டாள்... Ôஉங்க டாய்லெட்டை நான்கொஞ் சம் யூஸ் பண்ணிக்கலாமா?Õ
‘தாராளமாக!’ என்றேன்.
ஐஸ்கிரீம் பேக்கை ஓர மாக வைத்துவிட்டு, உள்ளே சென்றாள். விளக்கிச் சொல்ல முடியாத ஆயிரம் பிரச்னைகளை சுமந்துகொண்டுதான் விற்பனைப் பிரதிநிதிகள் தெருக்களில் அலை கிறார்கள். நினைக்கை யில் மாநகர் மீது ஆத்திர மாக வந்தது. சுகாதாரமான கழிப்பறைகளைக்கூட உருவாக்கித் தர முடியாத இந்த நகருக்கு எதற்காக இத்தனை பேர் தினமும் வந்து குவிகிறார்கள்?
விற்பனை பிரதிநிதியின் முகத்தில் ஈரம் வழிந்தது. ‘ரொம்ப தேங்க்ஸ் சார்!’ என்றவள், Ôரெண்டு வருஷமா இந்த வேலை பாக்குறேன். வீடு வீடா நடந்து கால் தேய்ஞ்சு போச்சு சார்! அது கூடப் பரவாயில்லை... தனியா வர்ற பொண்ணு தானேனு பல்லை இளிக்கிறாங்க பாருங்க, அதைத்தான் சகிக்க முடியலை. அப்படியே பல்லைத் தட்டி உடைக்கலாமானு வருது. ஒரு நாள் வேலை செஞ்சா ஐம்பது ரூபா கிடைக்கும். அதுக்குத் தெரு நாய் போல அலையுறோம். இருபது வயசு ஆனாலும் சரி, அறுபது வயசு ஆனாலும் சரி... ஆம்பிளைப் புத்தி ஒண்ணுதான் சார். பொம்பளைன்னா வாயிலே தானா எச்சில் ஒழுகுது பாருங்க. சகிக்க முடியலைÕ என்றபடி தனது சுமைகளைத் தூக்கிக் கொண்டாள். ஏதோ நினைத்துக் கொண்டவள் போல, ‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க. மனசிலே தோணுச்சு... பேசிட்டேன்!’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெயிலில் இறங்கிப் போய்விட்டாள்.
அவள் போன நெடுநேரத்துக்கு அந்த உக்கிரம் அறையில் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. காமம்தான் இப்படி அலைக்கழிக்கிறதா... இல்லை, காம உணர்ச்சிகளின் போர்வையில் நமது மன வக்கிரங்கள் வெளிப் படுகின்றனவா?
மேற்கு மலைத் தொடரில் உள்ள ஆதிவாசிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கு ஆண்களும் பெண்களும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். பெண்களைக் கேலி செய்வதோ, அசிங்கமாக நடந்துகொள்வதோ கிடையாது. ஆண்களைவிடவும் பெண்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள். கர்ப்பிணிப் பெண் தலையில் ஒரு சுமையும், இடுப்பில் ஒரு சுமையுமாக சர்வ சாதாரணமாகப் பாறையில் ஏறி, நடந்து வந்துகொண்டு இருப்பாள். உண்மையில் காலத்தில் பின்தங்கிப் போனது நாமா, அவர்களா?
சரித்திரம் முழுவதும் பெண்களின் உடல்மீது படிந்த ரத்தக் கறையைத்தான் காண முடிகிறது. இந்தியப் பிரிவினை யின்போது கொல்லப்பட்ட வர்களை விடவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள்தான் அதிகம். இதைவிடவும் மிகக் கொடுமையானது, அப்படி வன்கொடுமையால் பாலியல் உறவு கொள்ளப்பட்ட பெண்கள் கர்ப்பமாகி, அந்தக் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசே முகாம்களை நடத்தியது. ஒரே நாளில் இருபதாயிரம் பெண்கள் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டார்கள். சூறையாடப்பட்ட நகரங்களைவிட சிதைக்கப்பட்ட பெண் உடல்கள் அதிகம். வன்முறையின் இலக்கு எப்போதுமே பெண் உடல்தான்!
எத்தனையோ இரவுகளில் காரில் பயணம் செய்யும்போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் புளிய மரங்களின் அடியில் நின்றபடி லாரி களின் முகப்பு வெளிச்சத்துக்கு கண் கூசி நிற்கும் பெண்களைக் கண்டிருக்கிறேன். வாழ்வின் எந்த நெருக்கடியிலும் இந்த அளவு தன்னை விற்று வாழும் நிலையை ஆண் அடைந்ததே இல்லை. அவனுக்குப் பெண்ணின் துயரம் புரியவே புரியாது.
தான் வாழ வேண்டும் என்பதற்காக எவரையும் ஏமாற்றி, திருடி வாழத் தயங்காதவன் ஆண். தன் உடலில் ஒரு சிறிய வேனல் கொப்பளம் வந்தால்கூடக் கூச்சல் போடுகின்றவன். உடல் அவனுக்கு கேளிக்கையின் சாதனம். புல்தரையைக் கண்ட பசு மேய்வது போல, அவனுக்குப் பெண்கள் வெறும் இச்சையை தீர்க்கும் பொருள் மட்டும்தான்!
வளர்ந்த சமூகமாக இருந்தாலும் சரி, பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பெண்களை நடத்தும் விதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவே இல்லை. பெண்கள் மீதான ஒடுக்குமுறை யும் வன்முறையும் இல்லாத சமூகம் இருக்கிறதா என்ன? குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு பெண்கள் மீது செலுத்தி வரும் வன்முறை குறித்து இன்று இலக்கியத்தில் தீவிர கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தக் கேள்விகளை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுப்பியவர் ஜி.நாகராஜன். இவர் தமிழின் விதிவிலக்கான எழுத்தாளர். மரபான கதை உலகை விட்டு விலகிய கலகக்குரல் இவருடையது. இவரது கதையுலகம் முழுவதும் பெண்களால் நிரம்பியது. இந்தப் பெண்களில் பெரும்பான்மையோர் பாலியல் தொழிலாளர்கள். ஒடுக்கப்பட்ட இந்தப் பெண்களின் வாழ்வை, அக நெருக்கடிகளை, மூச்சுத் திணறலை தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்தவர் ஜி.நாகராஜன். இவரது ஆண்மை என்ற கதை மிகச் சிறப்பானது.
பாலியல் தொழில் புரியும் ஒரு பெண்ணைப் பற்றியது இக்கதை. அவள் தன் அப்பா மற்றும் தம்பியோடு பேருந்து நிலையத்தில் வந்து நின்றுகொண்டு ஆள் பிடிக்கிறாள். அவளிடம் காசு கொடுத்து இன்பம் பெறுவதற்காக வந்து சேர்கிறான் ஓர் இளைஞன். படுக்கை அறையில் அந்தப் பெண்ணிடம், எதற்காக அவள் அப்பாவும் தம்பியும் இது போன்ற வேலைக்கு துணை செய்வதற்கு நிற்கிறார்கள் என்று மனச் சங்கடத்துடன் கேட்கிறான்.
தன் அப்பா பிசினஸ் செய்து அதில் தோற்றுப் போய்விட்டதாகவும். அப்பாவின் நிலையை நினைத்து நினைத்து அம்மாவுக்குப் புத்தி பேதலித்துப் போனதாகவும், அன்றிலிருந்து அம்மாவைக் குணப்படுத்துவதற்காக அவர் எதையும் செய்யத் துணிந்துவிட்டார் என்றும், ‘வீட்டை மாமாதான் பராமரிக்கிறார். அவருக்கு நான் இப்படியரு தொழில் செய்வது தெரிந்தால் விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவார்’ என்றும் சொல்கிறாள்.
குடும்பச் சுமையின் காரணமாக பெத்த பெண்ணைத் தகப்பனே கூட்டிக்கொடுப்பதை இளைஞனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான். ஏன் அவளோடு உறவுகொள்ளவில்லை என்று அவள் கேட்டதற்கு, தான் ஒரு பேடி, ஆண்மையற்றவன் என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறி விடுகிறான் என்பதோடு கதை முடிகிறது.
கதையை வாசித்து முடிக்கும்போது ஒரு கத்தி ஆழமாக உடலில் இறங்குவது போல வலியும் துக்கமும் ஏற்படுகின்றன. அதிநவீன கணிப்பொறியும், அணு ஆயுதங்களுமாக உலகம் தனது வெற்றியின் களிப்பை ஒருபக்கம் கூச்சலிட்டுக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு பக்கம் துடைத்துப் போட்ட காகிதங்களைப் போல பெண்களைச் சர்வ அலட்சியமாக நடத்தும் சூழலும் இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள ஆறுகளுக்கெல் லாம் பெண் பெயரிட்டது ஆற்றைப் போலவே பெண்களும் எவரும் கவனிக்கப்படாமலும், ஆக்ரமிப்புக்கும் அத்துமீறலுக்கும் உள்ளதாவதால்தானோ என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. என்ன செய்வது..! நாடே கொண்டாடும் சத்தியவான் அரிச்சந்திரன்கூட தன் மனைவியை ஏலம் போட்டு விற்றவன் தானே? ஜி.நாகராஜன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ்ச் சிறுகதையுலகில் இவருக்கென்று தனியான இடம் உண்டு. பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது.
கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கிய நாகராஜன், போதையின் பிடியில் சிக்குண்டு நாற்பது வயதுக்குள்ளாகவே சுய அழிவைத் தேர்வு செய்துகொண்டவரானார். இவரது கதைகள் வாழ்வின் போலித்தனத்தை, இழிவை விமர்சனம் செய்கின்றன. நிழல் உலகமாக இருந்து வரும்பாலியல் தொழிலாளர்களின் வாழ்வு இவரது படைப்புகள் எங்கும் உக்கிரமாக வெளிப்படுகின்றன.

கந்தர்வன்

கல் தடம்

கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல; அதன் ஊடாக இசையும் கலையும் சிறுவணிகமும், மருத்துவ மும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக் கின்றன. கோயில் ஒரு கூட்டு வெளி. அது யாருமற்றவர்களுக்கான போக்கிட மாகவும், காலத்தின் மாபெரும் சாட்சியாக வும், கோடிக்கோடி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் சமர்ப்பிக்கப் படும் இடமாகவும் இருக்கிறது.
ஆனால், பிரார்த்தனை என்பது வெறும் சடங்காகிவிட்ட சூழலில், தெய்வத்தைத் தவிர மற்ற யாவும் கவனிப்பாரற்றுப் போகத் துவங்கி விட்டிருக்கின்றன. ஓதுவார்களின் தேவாரப் பாடலும், நாகஸ்வர இசையும், படபடக்கும் புறாக் கூட்டமும், தண்ணீர் நிரம்பிய தெப்பத்தின் மீது கோபுர நிழல் ஊர்ந்துகொண்டு இருப்பதும், பண்டாரங்களின் ஞானப் பாடலும், எண்ணெய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றங்களும், பிராகாரத்தை நிறைக்கும் மணியோசையும், சந்தன மணமும், கால் தூக்கி நிற்கும் யாளிகளும், உற்சவமும், உலாவும், தேரும், திருவிழாவும் கோயிலின் புராதன நினைவுகள் போலவே புதையுண்டு கிடக்கின்றன.
இன்று கோயில் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தைக் கூடம். அதே கற்தூண்களும், சிற்பங் களும் இருக்கின்றன. ஆனால், அதன் மீது எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள், அவர்களின் முழு முகவரியோடு செல்போன் நம்பர் வரை பொறிக்கப்பட்டு மின்னுகின்றன. (நூற்றாண்டைக் கடந்தும் அழகு குறையாத யாளியைச் செய்த சிற்பியின் பெயரோ இன்று வரை யாருக்குமே தெரியாது!).
தரிசனத்துக்கும் முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள். சிபாரிசுக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு, என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகிவிட்டது கோயில். அமைதி யையும் சாந்தத்தையும் இன்று கோயிலில் காண்பது அபூர்வமாகி விட்டது.
கோயிலுக்குச் செல்பவர்களில் ஒரு சதவீதம் பேர்கூட அங்குள்ள சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிராகாரச் சுவர் முழுவதும் கல் வரிகளாக நீளும் கல்வெட்டுகளையோ நின்று பார்ப்பதை நான் கண்டதே இல்லை. பொதுச் சுவர்களில் சிவப்பு நிறங்களில் ஒட்டப்படும் விரை வீக்க விளம்பரங்களைக்கூட நின்று படிப்பதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால், மாறாத அழகும் புன்னகையும் கொண்ட சிற்பங்களை நேர்கொள்வதற்கு எவருமே இல்லை.
பல கோயில்களில், அங்கு பணிபுரிவர்களுக்கே எது என்ன சிற்பம் என்று பெயர்கூடத் தெரிவதில்லை. நான் கோயிலுக்குச் செல்ல நேர்ந்த சமயங்களில், வெகு அரிதாகவே சன்னதிக்குச் செல்வேன். மற்றபடி, எனக்குக் கோயில் ஒரு சிற்பக் கூடம். காலத்தின் கருவறை. வழிபாடுள்ள கோயில்களிலாவது யாராவது ஆட்கள் தென்படுகிறார்கள். கைவிடப்பட்டு தூர்ந்த நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் சிற்பங்கள் மூளியாக்கப்பட்டு, கை கால் இழந்த நிலையில் சிதறிக் கிடக்கின்றன. புளியமரத்தடியில் தேவகணங்களும், துவாரபாலகர்களும் உருச்சிதைந்து போய், கேட்பாரற்றுக் கிடக்கிறார்கள்.
சமீபத்தில், திருவிடைமருதூரில் உள்ள பாவை விளக்கைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நின்றிருக்கிறது அந்த விளக்கு. ஐந்தரை அடி உயர வெண்கல விளக்கு. தொலைவிலிருந்து பார்க்கும்போது யாரோ ஒரு பெண், நூற்றாண்டுகளாக கையில் விளக்குடன் நின்றுகொண்டு இருப்பது போல இருக்கிறது. அவளின் முக வசீகரமும், நகக்கண்கள்கூட துல்லியமாக வார்க்கப்பட்டிருந்த அழகுமாக, பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போன்ற ஈர்ப்பைத் தருகிற விளக்கு.
சரபோஜி மன்னர்களின் காலத்தில் வாழ்ந்த பெண் அவள். தனக்கு விருப்பமானகணவன் வேண்டும் என்பதற்காக வேண்டுதல் செய்து அதை நிறைவேற்றும் படியாக தன்னைப் போலவே வெண்கலத்தில் விளக்கு செய்து வைத்திருக்கிறாள். அந்த பெண்ணின் கண்கள் காதல் ஏறி கவிழ்ந்திருக்கின்றன. உதட்டில் சந்தோஷம் கரை தட்டி நிற்கிறது. அவள் காலடியில் உள்ள கல்வெட்டில் அவளது பிரார்த்தனையின் நோக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதை வார்த்து எடுத்தவன் எத்தனை பெரிய கலைஞனாக இருந்திருப்பான்! எப்படி அவளது ஆடை மடிப்புகளைக்கூட இத்தனை சுத்தமாகச் செய்ய முடிந்திருக்கிறது அவனால்! அதுவும், அவளது கையில் உள்ள விளக்கு எரியும்போது முகத்தில் ஒளிர்ந்து படரும் சுடரொளியில் முகம் வெட்கத்தில் சுருங்கி விரிவது போலவே இருக்கிறது. இத்தனை வசீகரமும் கவனிக்கப்படாமல் ஒதுங்கியே இருக்கிறது. அவசரமும் பரபரப்பும் மிக்கவர்களாக கையில் காசை இறுக்கிப் பிடித்தபடியே சன்னதியை நோக்கி ஓடும் மனிதர்களின் கண்களில் அந்தப் பாவைவிளக்கு படுவதே இல்லை. ரயில் நிலையங்களிலும் ரேஷன் கடைகளிலும் காண முடிந்த பரபரப்பு கோயிலுக்குள்ளும் தொற்றிக்கொண்டு விட்டது.
இதன் இன் னொருபுறம், கிராமப்புற கோயில்களில் பெரும்பான்மை, சாதியைக் கட்டிக் காக்கும் காப்பரண் களாக ஆகி இருக்கின்றன. கிராமக் கோயில் எதிலும், எவரும் விருப்பம்போல நுழைந்துவிட முடியாது. ஒவ்வொரு தெய்வமும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியது! மற்ற எந்த சாதிக்காரனும் அந்தக் கோயிலின் வாசற்படியைக்கூட மிதித்துவிட முடியாது. ஆலயப் பிரவேசம் நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோயில்கள் பல ஊர்களிலும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆறு வருடங்களுக்கு முன், நானே ஒரு சம்பவத்தை நேரில் கண்டிருக்கிறேன். சிவகாசி அருகில் உள்ள சிற்றூர் ஒன்றில் உள்ள காளியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரிந்து, அரசு அவர்கள் ஆலயப் பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.
குறிப்பிட்ட நாளில், தாசில்தாரில் துவங்கி அத்தனை அரசு அதிகாரிகளும் அந்தக் கிராமத்தில் குவிந்தார்கள். ஆனால், எந்த மக்கள் ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமோ, அவர்களில் ஒருவர்கூடத் தன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அரசு அதிகாரியே ஒரு தட்டில் பழம், தேங்காய் வாங்கி எடுத்துக்கொண்டு, அவர்களில் சிலருக்குத் தைரியம் சொல்லி அழைத்து வந்திருந்தார். ஆண்களும் பெண்களுமாக நாற்பது பேர் வந்தனர். கோயிலுக்குள் நுழைவதற்காக அவர்கள் வந்து நின்றபோது, அந்த முகங்களில் பயமும் நடுக்கமும் ஒளிந்திருப்பதைக் காண முடிந்தது. வயதான பெண் ஒருத்தியின் கைகள் நடுங்கின. கோயிலுக்குள் அவர்களை அனுமதித்தது தங்களுக்கு உடன்பாடில்லை என்பதுபோல, மற்றொரு மேல்சாதியினர் கோயிலை விட்டு விலகியே நின்றிருந்தார்கள்.அதுவரை இருந்த பூசாரி, அன்று தான் பூஜை வைக்க முடியாது என்று விலகிக்கொண்டார். தாசில்தாரே துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பூஜை வைத்தார்.
பூஜை முடிந்தது. பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த நாடகம் முழுவதும் ஒரு நாள்தான்! மீண்டும், அந்தக் கோயில் எந்தச் சாதிக்குச் சொந்தமாக இருந்ததோ, அவர்கள் வசமே திரும்பிப் போய்விட்டது. அன்று கோயிலில் சாமி கும்பிட வந்தவர்கள், அதன் பிந்திய நாட்களில், வேறு வேறு காரணங்களுக்காக உதைபட்டார்கள்.
வழிபாட்டை விடவும் முக்கியமானது சக மனிதனை மதிப்பதும், அவனைப் புரிந்துகொள்வதுமே ஆகும். நம்மைச் சுற்றிய மனிதர்களின் மீது தீராத துவேஷமும், பகையும், பொறாமையுமாக வாழ்கிற நாம், கோயிலில் மட்டும் எப்படிப் பரிசுத்தவாதிகளாக நடந்துகொள்ள முடியும்?
மனம் காழ்ப்பு உணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டு இருக்கும்போது, கருணையையும், அன்பையும் எப்படிக் கோயிலில் காண முடியும்? எளிய மனிதர்களின் விட்டுக்கொடுத்தல் எத்தகையது என்பதை நாம் உணரவே இல்லை. அடுத்தவனின் உரிமையை அபகரித்துக் கொள்வதற்குத்தான் நமது அறிவும் பலமும் அதிகம் பயன்பட்டிருக்கிறது.
கந்தர்வனின், ‘சாசனம்’ என்ற கதை எளிய மனிதர்களின் விட்டுக் கொடுத்தலையும் ஆவேசத்தையும் நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. கந்தர்வன் ஒரு கவிஞர். முற்போக்குச் சிந்தனையாளர். ‘விதவிதமாக மீசை வைத்தோம்... ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ என்று பாடும் கவியுள்ளம் கொண்டவர். சிறந்த சிறுகதைப் படைப்பாளி.
‘சாசனம்’ கதை, ஒரு புளிய மரத்தைப் பற்றியது. அந்த மரம் குறவர்கள் குடிசைகளுக்கு மத்தியில் உள்ளது. பிரமாண்டமான அந்த மரத்தடியில் பன்றிகள் அடைந்து கிடக்கின்றன. கதைசொல்லி அதைத் தனது அப்பாவின் புளியமரம் என்று அறிமுகப்படுத்துகிறார்.
அருகில் உள்ள ஊர்களில் அப்பாவுக்கு நிறைய நிலங்கள் உண்டு. யாவையும் குத்தகைக்காரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே அப்பா அவர்களுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டு இருப்பார். அந்த நிலம் யாவும் தாத்தாவுக்கு, மகாராஜா தானமாகத் தந்தவை. அதற்கு சாசனமும் இருக்கின்றன.
அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த மானது அந்த கொறட்டுப் புளி தான் (குற வீட்டுப் புளி என்பதைச் சொல்லக் கூச்சப்பட்டு, கொறட்டு புளியாக்கி இருந்தார் அப்பா). ஒவ்வொரு முறை புளியம்பழங்களை உலுக்கும்போதும், அந்தப் பகுதியில் உள்ள கிழவி ஒருத்தி யும் அவளது மகளும் மரத்தடியில் வந்து நிற்பார்கள். அந்த கிழவியின் மகள் தாத்தாவின் சாடையிலே இருப்பாள். அப்பா பேசும்போது அவர்கள் வாஞ்சையாகக் கேட்பார்கள். பழம் உலுக்கி முடிந்ததும் அப்பா தன் காலால் கொஞ்சம் பழங்களை ஒதுக்கி, அந்தக் கிழவியை எடுத்துக்கொள்ளச் சொல்வார். அவள் மறுப்பேதும் இன்றி அள்ளிக்கொள்வாள். உண்மையில், அந்தப் புளியமரம் தனக்குச் சொந்தமானதுதானா என்று அப்பாவுக்கே சந்தேக மாகத்தான் இருந்தது. அதைச் சொந்தம் கொண்டாட அவரிடம் எந்தச் சாசனமும் இல்லை. ஆனா லும், அதை அனுபவித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அடுத்த வருஷம் அவர் புளியம்பழம் உலுக்க ஆளைக் கூட்டிக்கொண்டு போனபோது, அந்தக் கிழவி மரம் தனக்குத்தான் சொந்தம் என்றும், அதை உலுக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் அறிவிக்கிறாள்.
அப்பா கால மாற்றத்தை உணர்ந்துகொண்டு அதிர்ச்சியடைந் தவராக, வெளியேறி வீடு திரும்பி வருகிறார். ஆனால், அந்த மரம் தன்னுடையதுதானா என்று பரிசோதிக்க, அவர் சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவில்லை என்பதோடு கதை முடிகிறது.
மறைமுகமாக இக்கதை விளக்குவதெல்லாம், அந்தக் கிழவி அவரது தாத்தாவின் மனைவிகளில் ஒருத்தி. அவளுக்கு உரிமையான மரத்தை இத்தனை வருடமாக அவள் அனுமதியோடு அப்பா அனுபவித்துக் கொண்டு இருந்தார். ஆனால், அதற்கான நன்றியோ, கருணையோ அவரிடம் இல்லை. முடிவாக, புளியமரத்துக்கு உரிமையானவள் குரல் தரும்போது, வழியின்றி வெறும் ஆளாகத் திரும்பிவிடுவதன் மூலம் அவர் உண்மையை ஒப்புக் கொள்வதை அறிய முடிகிறது.
பிறப்பில் உருவான பேதங்களைக் களைவதற்காகத்தான் கோயில்களும், பள்ளிக்கூடமும், அற நிலையங்களும் உருவாக்கப்பட்டன. இன்று அவையே சாதியையும், துவேஷத்தையும, வன்முறை யும் வளர்ப்பவை ஆகிவிட்டன.
சாலையோரத்தில் உள்ள நடுகல்லை ஒரு பௌத்தத் துறவி வணங்கிக்கொண்டு இருக்கிறார். அதைக் கண்ட மற்றொரு துறவி, ‘இதென்ன முட்டாள்தனம்?’ எனக் கேட்க, ‘கோயிலின் உள்ளே நீ வணங்கும் புத்தனும்கூட இதைப் போன்றதொரு கல்தானே?’ என்று சிரிக்கிறார் என்கிறது ஜென் கதை.
நிஜம்தானே! நாம் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்தையும், அன்பையும் தூர விலக்கிவிட்டு, அபிஷேகமும், ஆராதனைகளும் செய்வதால் மட்டும் மனம் மலர்ச்சியுற்றுவிடும் என்று நம்பினால், அதன் பெயர் முட்டாள்தனம்தான் இல்லையா?
தொழிற்சங்கவாதியாகவும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்த கலைஞராகவும் தீவிர பங்களிப்பு செய்த கந்தர்வன், வாழ்வின் அரிய தருணங்களைக் கதைகளாக்கியவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். Ôகண்ணதாசன்Õ இதழில் எழுதத் துவங்கிய இவர் Ôசெம்மலர்Õ, Ôசுபமங்களாÕ, ÔதாமரைÕ போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். கவியரங்க மேடைகளில் இவர் வாசித்த கவிதைகள் இன்றும் திரும்பத் திரும்ப பாடப்பட்டு வருகின்றன. Ôமீசைகள்Õ என்ற இவரது கவிதைத் தொகுப்பும் Ôபூவுக்கு கீழேÕ, Ôசாசனம்Õ போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் மிக முக்கியமானவை. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் உள்ள அவரது மகளின் வீட்டில் வசித்தபடி இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த கந்தர்வன் உடல்நலக் குறைவின் காரணமாக ஓராண்டுக்கு முன் மரணமடைந்தார்.

பய‌ம் - புதுமைப்பித்தன்

அன்று பொழுது போகவில்லை. தேகாரோக்கியத்திற்குக் கடல் காற்று நல்லதாமே! பீச் ரோட்டில் நடந்து கொண்டே போனேன்.

எவ்வளவு தூரம் போனேன் என்று எனக்குத் தெரியாது. கடற் காற்றும் மனவோட்டத்திற்குச் சாந்தியளித்தது. நானும் நடந்துகொண்டே போனேன். ஏறக்குறைய திருவல்லிக்கேணி ரேடியோ ஸ்டாண்டு கூப்பிடு தூரத்தில் வந்து விட்டது.

காலும் வலித்தது.

பாதையின் பக்கத்திலிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன்.

நல்ல நிலா.

அடி வானத்திலே மெல்லிய பூப்பஞ்சை வைத்து ஜிகினா வேலை செய்தது மாதிரி வெண் மேகங்கள் - எனது வரையற்ற மனம்போல் - கடலையும் வானையும் பிரித்துக் கட்டின.

மேலே சிதறுண்ட கனவுகள் போல், இலட்சியங்கள் போல், நட்சத்திரங்கள்.

பின்புறத்திலே கடல். ஆமாம்! கடல், எனது எண்ணங்களைத் தட்டிக் கொடுக்கும் பாவனையாக அலை எழுப்பி 'உம்' 'உம்' என்று ஒப்புக்கொள்ளும் கடல்.

மனதிற்குக் குதூகலம் வந்தது. கால்கள் நடப்பதற்கு மறுத்தன.

வீட்டிற்குச் சென்று என்னத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறேன்! இன்னும் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டுப் போனால் என்ன?

இருக்கும்பொழுது...

பெரிய ஆஜானுபாகுவான வெள்ளைக்காரன். குறுகக் கத்தரித்து விடப்பட்ட தலை, அகன்ற நெற்றி, நீண்ட நாசி, குறுகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, மெல்லிய, மனவுறுதியைக் காண்பிக்கும் உதடுகள், கிரேக்க சிற்பியின் கனவு போன்ற தேக அமைப்பு. மொத்தத்தில், புத்தியும் தேக பலமும் கூடிக் கலந்து பரிணமித்த மனிதன்.

அந்தக் கண்களில், எதிலும் ஆசை பூர்த்தியாகாத நோக்கு. அறியவேண்டிய அவா. ஐந்து நிமிஷம் சும்மாயிருப்பது சாவுக்கு நிகர் என்று உழைப்பில் நாட்டம் மிகுந்த தேகப் படபடப்பு.

பொதுவிலே, அந்தப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தங்கள் இரத்தத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்தார்களே, அந்த நாடோ டிகள், இந்த மகத்தான கூட்டத்தின் தனிக் குணம் இந்த வெள்ளைக்காரனின் ஒவ்வொரு சலனத்திலும் தெரிந்தது.

வந்தவன் என் பக்கத்தில் நேராக வந்து உட்கார்ந்தான். அவனிடத்தில் அந்த மிடுக்கு. வெள்ளையரின் சாம்ராஜ்யப் பெருமையில் பிறந்த அந்த மிருகத்தனம், அது அவனிடம் காணப்படவில்லை.

கண்ணிலே நல்ல குணம்; கட்டுறுதியுள்ள உடல்.

எனக்கு அவனிடம் பேசவேண்டுமென்ற ஆசை எப்படி ஆரம்பித்தது?

அவனுக்கு அந்தப் பிரச்னையே தோன்றவில்லை. சாதாரணமாக, இயற்கையாக மனிதனுக்கு மனிதன் பேசுவது மாதிரி என்னை வசப்படுத்திவிட்டான். புதிய அன்னிய நண்பன் என்ற ஹோதா எங்களுக்குள் மறைந்து போயிற்று.பேசுவது ஒரு தனிக் கலை. அது அவனுக்குத் தெரிந்து இருந்தது. சளைக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேசுவது என்றால் ஒரு மனிதனுடைய தனிப்பிரசங்கம் என்று நினைத்து விடுகிறார்கள் பலர். அவன் அப்படியல்ல. பக்கத்திலிருப்பவனைப் பதில் சொல்ல வைத்துச் சம்பாஷணைப் பந்தை உருட்டி விடுவதில் நிபுணன்.

அன்று பல சங்கதிகள் பேசி வரும்பொழுது நான் முதலில் நினைத்தது சரிதான் என்று பட்டது. அவன் மகத்தான நாடோ டி. துருவங்களிலிருந்து, அக்னிப் பிழம்பான பாலைவனங்கள் வரை, உலகத்தில் அவனுக்குத் தெரியாத பாகம் கிடையாது. அதுமட்டுமல்ல. நல்ல ரஸிகன். அவன் மனம் ஒரு இலட்சிய உலகில் வசித்து வந்தது. அதனால், ஒரு பூர்த்தியாகாத ஆசை, ஓர் ஆதர்சம், அவனைப் பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு சென்றது. அவன் இஷ்டப்பட்டாலும், அவனால் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க அவனது மனம் இடங்கொடாது.

"நீங்களும் பயந்திருக்கிறீர்களா?" என்று அவரது தேக அமைப்பை உற்று நோக்கினேன். அவர் சொல்வதை நம்ப முடியவில்லை.

அவரும் சிரித்துக்கொண்டு, "நானும் பயந்திருக்கிறேன். நீங்கள் ஏன் சந்தேகப்படவேண்டும்?" என்று கொண்டே தன் பையிலிருந்த ஒரு சுங்கானை எடுத்து நிரப்பி விட்டு, ஒரு இழுப்பு இழுத்து, புகையை மிகுந்த ஆர்வத்துடன் ரஸித்தார். கண்கள் ஏதோ யோசிப்பது போல் கனவு கண்டன.

"ஆமாம், நான் பயந்திருக்கிறேன். நான் சொல்லுகிறதைக் கேளுங்கள். பயம் தைரியசாலிக்கும் அசையாத நெஞ்சு படைத்தவனுக்கும்தான் வரும். கோழைத்தனம், பயமல்ல. பயம் மனதில் தோன்றும் ஒரு நடுக்க நினைப்பு. உள்ளத்தையே, உயிரையே அப்படிக் குலுக்கிவிடுகிறது. சாவு நிச்சயம் என்று நாம் எதிர்பார்க்கும் சமயத்தில் பயம் தோன்றாது. ஆமாம் தெரிந்த அபாயத்தில் பயம் தோன்றாது. அது எதிர்பாராத சம்பவங்களில், இன்னதென்று அறியமுடியாத ஒரு சக்தியின் சூழ்ச்சியில், மிகவும் சாதாரணமான தொந்தரவுகளில் வந்துவிடும். குண்டுக்கும் கத்திக்கும் அஞ்சாதவன், நள்ளிரவில் திடீரென்று பிசாசைக் கண்டால், பயம், புத்தியை வலிமையைச் சிதற அடிக்கும். பயம் இன்னதென்று தெரிந்து கொள்வான்.

"எனக்குப் பயம் என்றால் இன்னதென்று தெரியும். ஒரு தடவை பட்டப் பகலில் - அது பத்து வருஷங்களுக்கு முந்தி - அனுபவித்தேன். மற்றொருதரம் போன டிசம்பரில் ஓர் இராத்திரியில் அனுபவித்தேன்.

"ஆம்! நான் எத்தனையோ தடவை எமனுடன் போராடியிருக்கிறேன். மனிதனுடைய மிருகத்தனத்தின் பேரில் எனது சக்தியால் வெற்றி பெற்றிருக்கிறேன். எத்தனை சண்டைகள்! தரையிலும் கடலிலும்! அவைகளில் ஒரு தடவையாவது பயந்தேனா!

"நான் பத்து வருஷங்களுக்குமுன் ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கெல்லாம் உயிர் துச்சம்! சாவிற்கு எப்பொழுதும் தயார். அதுதான் மனிதனுக்கு வரும் தீங்கில் எல்லாம் லேசானது என்று நினைக்கிறார்கள் அந்தப் பிரதேசத்திலிருப்பவர்கள். அங்கு அந்தப் பாதுகாப்பற்ற இரவிலே கவலையற்ற தூக்கம். எங்களுக்கு, எங்கள் நாட்டிலே அப்படியல்ல, ஒவ்வொரு வினாடியும் செத்துக் கொண்டிருக்கும் கோழைத்தனம். நீங்களே பாருங்களேன் மேல்நாட்டு அரசியல்களின் சந்தேகத்தை! ஆயுதம்! படைகள்! ஆயுதம்! சந்தேகம்! சந்தேகம்..."

சற்று மௌனம்.

"அப்பொழுது நடந்ததுதான். நான் தெற்கு ஊர்க் காள் பாலைவனத்தைக் கடந்துவிட்டேன். உலகத்திலுள்ள பிரதேசங்களிலே அது பார்க்கவேண்டிய இடம். பாலைவனம் என்றால், இந்தக் கடற்கரையோரத்திலே கோவணம் மாதிரி நீண்டு கிடக்கிறதே இப்படியிருக்குமென்றா நினைத்துக் கொண்டீர்! அது மணல் சமுத்திரம், எங்கு பார்த்தாலும், மணல், மணல், மணல். திடீரென்று ஒரு பேய்க்காற்று வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். இவ்வளவு நேரம் செத்துக் கிடந்த மாதிரி இருந்த மணல் அலைமேல் அலையாக எழும்பிக் குவியும்."அந்த எல்லையற்ற மௌனத்திலே மணல் மலைகள் பெரிதும் சின்னதுமாக இருக்கும். அதில் ஏறி ஏறி இறங்க வேண்டும், பாலைவனத்தைக் கடக்க வேண்டுமானால். அங்கே நிழலா?

"குதிரைகள் முட்டளவு மணலில் புதைந்துதான் நடக்கும். களைப்பு என்பதற்கு அர்த்தம் அந்தக் குதிரைகளுக்குத் தெரியும். அதில் ஏறிச்செல்ல வேண்டிய விதிபடைத்த மனிதனுக்குத் தெரியும்.

"அப்பொழுது நாங்கள் இருவர் சென்றோம். கூட நான்கு ஒட்டகங்கள், எங்களுடைய சாமான்களுக்கு; அதன் ஓட்டிகள். எங்களால் பேசமுடியாது அவ்வளவு நாவரட்சி; கானலினாலும், களைப்பினாலும் மூச்சுத் திணறுகிறது. திடீரென்று எங்களில் ஒருவன் பயந்து ஓலமிட்டான். நாங்கள் திடுக்கிட்டு நின்றோம். ஆமாம்! திடுக்கிட்டு விட்டோ ம்! அந்தப் பிரதேசத்திலே வழி தவறிய பிரயாணிகளுக்குத்தான் அந்தக் காரணம் சொல்ல முடியாத நிகழ்ச்சி தெரியும்.

"எங்கோ கிட்டத்தான். எவ்வளவு கிட்டவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு முரசொலி! அதற்குத்தான் பாலையின் முரசு என்று பெயர். முதலில் காதுகளைத் துளைக்கும்படியாக, மனது இடிந்து, சுக்கலாகப் போகும்படியாகக் கேட்டது. சற்று நேரம் ஒன்றுமில்லை. பிறகு அந்தச் சாவின் அறிகுறியான, பயங்கரமான மௌனத்தை வெருட்டி, எல்லையற்ற வானத்தை நிறைத்து முழங்கியது அந்த முரசொலி.

"ஒட்டகக்கார அராபியர்கள் 'ஐயோ! மரணம் நெருங்கிவிட்டது' என்று கூவினார்கள்.

"அவர்கள் கூவி முடியவில்லை. என்னுடைய நண்பன் குதிரையிலிருந்து விழுந்தான். சூரிய கிரணத்தினால் தாக்கப்பட்டு, அவனை உயிர்ப்பிக்க வெகு கஷ்டப்பட்டோ ம். முரசொலி, டம், டம், டம் என்று காதைத் தொளைத்தது. எனது இறந்த நண்பனைக் கூர்ந்து கவனித்தேன். பயம் தோன்றியது.

"பயம்!

"நெஞ்சை அப்படியே அமுக்கி உயிரைக் கசக்கிவிடும் பயம்! அதற்குச் சந்தேகமில்லை. பயந்தான்.

"சுற்றி நாலுபுறமும் மணற்குன்றுகள். ஜன சஞ்சாரத்திற்கும் எங்களுக்கும் இடையே இருநூறு மைல். எனது நண்பன் இறந்து போனான். நான் எப்பொழுதோ?...

"அந்த முரசு - 'அதன் காரணம் என்ன?' என்று நான் கேட்டேன்.

"பலர் பலவிதமாகச் சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்று சொல்லுவது? தூரத்திலுள்ள மேளங்களின் சப்தம் காற்றில் கலந்து எதிரொலிக்கிறது என்கிறார்கள். அங்கிருக்கும் ஒருவிதப் பனையின் ஓலை. சலசலப்பதின் சப்தம் என்கிறார்கள். உண்மையில் அது கானல் இருக்கிறதே அது மாதிரி ஒளியின் சப்த மயக்கம். பிறகுதான் ஸயன்ஸ்படி அது எந்தக் காரணத்தினால் உண்டானது என்று தெரிந்து கொண்டேன். பயந்தது நிச்சயம்...

இன்னொரு தடவை பயந்தேனே அது பிரான்ஸ் தேசத்துக் காடுகளில்.

"அன்று, இரவு வெகு சீக்கிரம் வந்துவிட்டது. அவ்வளவு மேகம். நல்ல மழைக்காலம். அப்பொழுது எனக்கு வழி காட்டியாக ஒரு குடியானவன் வந்தான். வானத்திலே மேகங்கள் ஒன்றையொன்று பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு ஓடின. காற்று சண்டனாக வந்துவிட்டது. மரங்கள் தலைவிரித்தாடின. மரக்கிளைகள் பரிதாபகரமாக, பயங்கரமாக, முக்கி முனங்கிக்கொண்டு உறுமின. என்ன கம்பளிச்சட்டை போட்டுக்கொண்டு இருந்தும் குளிர் எலும்பைத் தாக்கியது."இனிமேல் செல்ல முடியாது என்று கண்டு, பக்கத்திலிருந்த ஒரு காவல்காரனின் குடிசைக்கு அழைத்துச் சென்றான். அந்தக் காவல்காரன் இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு திருடனைச் சுட்டுக்கொன்றவன். அதிலிருந்து அந்தத் திருடனுடைய பேய் வந்து அவனைத் தொல்லை செய்வதுமாதிரி அவனுக்கு ஒரு பிராந்தி - பயம். அவனுடன் அவனுடைய இரண்டு புத்திரர்களும் அவர்களுடைய மனைவிகளுடன் வசித்து வருகிறார்கள். இது அந்தக் குடியானவன் எனக்குப் போகும் பொழுது கூறினான்.

"இருள் அதிகமாகி விட்டதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கடைசியாகத் தூரத்திலே சற்று வெளிச்சம். நெருங்கினோம். ஒரு குடிசை கொஞ்சம் பெரியதுதான். வழிகாட்டி கதவைத் தட்டினான். உள்ளிருந்து பயத்தினால் திக்கு முக்கடித்த ஒரு குரல் யார் என்று கேட்டது. குடியானவன் பதில் சொல்லக் கதவு திறந்தது. உள்ளே சென்றோம்.

"நான் உள்ளே கண்ட காட்சியை ஒரு நாளும் மறக்க முடியாது. அந்த அறையின் நடுவில் பஞ்சுப்பெட்டிபோல் நரைத்த ஒரு கிழவன் கையில் குண்டு போட்ட துப்பாக்கியுடன் நின்றான். இரண்டு முரடர்கள் கையில் கோடரியை ஏந்திய வண்ணம் நின்றார்கள். சற்று தூரத்தில் வெளிச்சம் படாத இருட்டுப் பாகத்தில் இரண்டு பெண்கள் சுவரின் பக்கமாகத் திரும்பி முழங்காலில் நின்று கொண்டு இருந்தார்கள்.

"திடீரென்று கிழவன் பெண்களைப் பார்த்து எனது சௌகரியத்திற்கு ஒரு அறையைச் சுத்தம் செய்யச் சொன்னான். அவர்கள் அசையவில்லை.

"மறுபடியும் கிழவன் சொன்னான்: 'முன்பு ஒரு மனிதனைக் கொன்றேன். போன வருஷம் அவன் வந்தான். இன்றும் அவன் வருவான்!'

"அந்தக் குரலைக் கேட்டதுமே எனது மனம் கிடுகிடுத்துப் போய்விட்டது. இரத்தம் அப்படியே உறைந்து போய்விட்டது... இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றேன். முடியவில்லை.

"கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்துறங்கிற்று. அதற்கு இந்தப் பயம் தெரியுமா?

"வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சடசடா' என்று ஒரு இடி முழக்கம். கண்ணை வெட்டும் மின்னல். சாத்தான் உடனே பிரசன்னமாயிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

"அங்கிருந்தவர்கள் எல்லாம் ஏதோ மந்திர சக்தியில் கட்டுப்பட்டவர்கள் போல, எதையோ எதிர்பார்ப்பவர்கள் போலக் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். வெகுதூரம் நடந்ததினால் களைப்பு, இவர்களைத் தேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமம் எல்லாம் சேர்ந்து எனக்குத் தூக்கத்தை வருவித்தது. படுக்கப்போக எழுந்தேன். அப்பொழுது அந்தக் கிழக்காவல்காரன், ஒரே பாய்ச்சலில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, 'அதோ வந்துவிட்டான்! வந்துவிட்டான்! காத்திருக்கிறேன்!' என்று கூக்குரலிட்டான். உடனே பெண்களும் ஓடிப்போய் முன்போல் சுவருடன் ஒட்டி நின்றார்கள். கிழவனுடைய புத்திரர்கள், மறுபடியும் கோடாலியைத் தூக்கிக் கொண்டார்கள். அவர்களைச் சமாதானப் படுத்த முயன்றேன். அப்பொழுது அந்த நாய் விழித்துக்கொண்டு பயங்கரமாக ஊளையிட்டது. அது ஏறக்குறைய மனிதனுடைய குரல் மாதிரி இருந்தது...

"எல்லாரும் அந்த நாயையே கவனித்தோம். அசையாமல் நின்றுகொண்டு, எங்கள் கண்களுக்குத் தெரியாத எதையோ எதிர்நோக்குவது போல் தெரிந்தது. அதற்கு மயிர் எல்லாம் சிலிர்த்து நின்றது.

"எனக்கு வழி காட்டி வந்த குடியானவன். 'நாய்க்குத் தெரிகிறது, நாய்க்குத் தெரிகிறது!' என்று கூப்பாடு போட்டான். அந்தத் திருடனைக் கொல்லும்பொழுது அந்த நாயும் கூட இருந்ததாம்."என்னை யறியாமல் பயம் என்னைப் பிடிக்கத் தொடங்கியது... அங்கிருந்தவர்கள் பயத்தால் எதையோ எதிர் நோக்கியிருந்தார்கள்... அந்த நாய் எதையோ பார்க்கத்தான் செய்தது... ஒரு மணி நேரம் இப்படி ஊளையிட்ட வண்ணமாக இருந்தது. அதன் குரல்! அதை நினைக்கும்பொழுதே குடல் நடுக்கம் எடுக்கிறது. காரணமில்லாத, அடக்க முடியாத பயம் என்னைப் பிடித்தது. எதற்குப் பயம்? எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ பயப்படக்கூடியது ஒன்று இருக்கிறது என்று தெரிந்தது.

"என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவர்போல், ஒரு சின்னச் சத்தத்திலும் நெஞ்சு வெடித்துப்போகும் நிலைமையில் இருந்தோம். அந்த நாய் அறையைச் சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்தது... எங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.

"என் கூட வந்த வழிகாட்டிக்கு இதைத் தாங்க முடியவில்லை. திடீரென்று எழுந்து ஓடி நாயைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவையடைத்து விட்டான்.

"அதற்கு அப்புறம் நிசப்தம்! இந்த நிசப்தம் எங்களுக்கு இன்னும் அதிகப் பயப் பிராந்தியை உண்டு பண்ணிற்று.

திடீரென்று ஏதோ ஒன்று சுவரருகில் நிற்பதாகத் தோன்றிற்று. தொடுவதுபோல் திறக்க முயல்வது போல் தெரிந்தது. பிறகு... மறுபடியும் தெரிந்தது. பிரகாசமான கண்கள்! ஏதோ ஒரு குரல், ஈனஸ்வரத்தில்.

"சமையற்கட்டின் பக்கம் ஏதோ அமளி. அந்தக் கிழவன் சுட்டான். அவன் புத்திரர்கள் ஓடிவந்து கதவையடைத்து அதன்மீது மேஜையைச் சாத்தினர். அந்த துப்பாக்கிச் சத்தத்தில் எனது உயிரே போய்த் திரும்பியது. பயம்! உளறியடித்துக் கொண்டு நின்றேன்.

"அன்று இரவு முழுவதும் அப்படித்தான். விடியும் வரை கதவைத் திறக்க எங்களுக்குத் தைரியம் வரவில்லை.

"வானம் வெளுத்தது.

"சிறு வெளிச்சம் சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது. வெளியே சென்றோம்.

"அந்த நாய்தான். வாயில் குண்டுபட்டுச் சுவரடியில் இறந்து கிடக்கிறது."

அந்த வெள்ளைக்கார நண்பர் சற்று மௌனமாக இருந்தார்.

பிறகு, "மனப்பிராந்தி இருக்கிறதே அதைப் போன்ற பயம் வேறு கிடையாது" என்றார்.

கோணங்கி


புகை நடுவில்

பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து எழுந்து பால்கனியில் வந்து நின்றால், இருளைக் கரைத்துக்கொண்டு யாருமற்ற தெருவில் மழை தனியே நடந்துபோய்க்கொண்டு இருக்கும் அபூர்வ காட்சியைக் காண முடியும்.

பால்யத்தின் பொழுதுகளும் பின்னிரவு மழைக் காட்சிகள்தான்.திடீரென, எப்போதோ உடன்படித்த சிறுவர்களின் முகம் கனவில் ததும்பத் துவங்குகிறது. பெயர்கூட மறந்துபோன வகுப்புத் தோழன், காக்கி டிராயரும் வெள்ளைச் சட்டையும் திருநீறு பூசிய முகமுமாய் கனவின் படிகளில் வந்து அமர்ந்திருக்கிறான். என்ன சொல்வ தற்காக அவன் கனவில் பிரவேசிக்கிறான் என்று தெரியாது. ஆனால், அடுத்த நாள் முழுவதும் மனம் பிரிவின் துக்கத்தில் ஊறிக்கொண்டே இருக்கும். ஏதேதோ நகரங்களில் சுற்றியலையும்போது, இது போன்று வெவ்வேறு வயதில் நடந்தவை கனவுகளாக வந்திருக்கின்றன.

கடந்த ஆண்டின் மழைக்காலத்தில் மதிய பொழுதில் எனக்கொரு போன் வந்தது. போனில் பேசிய பெண் மிகவும் தயக்கமான குரலில், நான் எஸ்.ராமகிருஷ்ணன் தானா என்று நாலைந்து முறை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள்.அவள் பெயர் சித்ரா என்றும், என்னோடு பள்ளியில் படித்தவள் என்றும் அவள் நினைவுகூர்ந்தபோதும் அவளது முகத்தை என்னால் நினைவு படுத்திப் பார்க்க முடியவில்லை.

அவள் திருத்தணியில் வசிப்பதாகவும் என்னைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாள். எப்போது வேண்டு மானாலும் வரலாம் என்று சொல்லிய பிறகு, ‘எனக்கு ஒரு உதவி செய்யணும். உன்னால முடிஞ்சா நீ செய்வாயா?’ என்று மிக உரிமையுடன் கேட்டாள். ‘கட்டாயம் செய்கிறேன்’ என்று அவளை வீட்டுக்கு வருமாறு அழைத்தேன்.

அன்று மாலையில், அவள் தன் இருபது வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நேரில் பார்த்தபோதும், மனதில் அதற்கு முன்பு அவளை பார்த்திருந்த நினைவின் அடையாளங்களே இல்லை. அவளின் தலை பாதி நரைத்துப் போயிருந்தது. முகத்துக்குப் பொருந்தாத கண்ணாடி அணிந்திருந்தாள். ஏதோ நேற்றுதான் பள்ளியிலிருந்து பிரிந்து சென்றதைப் போல, கடகடவென ஏதோ கேட்கத் தொடங்கினாள்.

அவள் எந்த வகுப்பில் எப்போது படித்திருப்பாள் என்று நானாக நினைவில் தேடிக் கொண்டேயிருந்தேன். சில நேரம் அவள் பரிச்சயமானவள் போல் தோன்றினாள். சில வேளை யோசிக்கையில் முற்றிலும் அறியாதவளாக இருந்தாள். அவளின் மகன், விருப்பமில்லாத ஒரு இடத்துக்குத் தன்னை அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் போல தலைகவிழ்ந்தபடியே உட்கார்ந்திருந்தான்.

அவளது கையில் சிறிய மஞ்சள் பை இருந்தது. அவள், தான் காதிகிராஃப்டில் வேலை செய்வதாகவும், தனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள், இவன் ஒருவன் மட்டும்தான் பையன் என்றும், அவளின் கணவன் அம்பத்தூரில் வெல்டராக வேலை பார்ப்பதாக வும் சொன்னாள். இரண்டு நிமிஷங் களுக்கு ஒரு முறை, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத புகை மூட்டம் உருவானது.

பிறகு, அவள் தன் பையில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்றை எடுத்து கையோடு கொண்டு வந்திருந்த சிறிய தட்டில் வைத்து, தன் மகளுக்குத் திருமணம் என்று சொல்லி நீட்டினாள்.

நான் திருமணப் பத்திரிகையை வாங்கிப் பிரித்துக்கொண்டு இருந்த போது அவள் தயக்கத்தோடு திரும்பவும் கேட்டாள்... ‘‘உன்கிட்டே ஒரு உதவி கேட்கணும்னு சொன்னேனில்லே... கேட்கக் கூச்சமா இருக்கு’’ என்றாள். ‘‘பரவாயில்லை, சொல்லு!’’ என்றதும், வார்த்தைகளை மென்று விழுங்கிய படியே சொன்னாள்... ÔÔஎன் பொண்ணு கல்யாணத்துக்கு நாலு பேர்கிட்டே தானம் கேட்டு பணம் வாங்கி தாலி செய்றேன்னு கோயில்ல வேண்டிட்டு இருக்கேன். அவளுக்குக் கல்யாண தோஷம். அதுக்குத்தான் இந்த வேண்டு தல். ஆறாயிரம் ரூபாய் வேணும். சொந்தக்காரங்க யார்கிட்டேயும் கேட்டு வாங்கக் கூடாது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னு யாரு இருக்கா... அப்போதான் உன் நினைப்பு வந்துச்சு. சரி, கேட்டுப் பார்க்க லாமேனு உன் போன் நம்பரை பத்திரிகை ஆபீஸ்ல கேட்டு வாங்கினேன்!ÕÕ

‘‘அதனால என்ன... நான் தருகிறேன்’’ என்று சொன்னதும் அவள் முகத்தில் லேசான வெட்க மும், சந்தோஷமும் துளிர்த்தது. என்னுடைய அறையில் இருந்த புத்தகங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், ‘‘எப்பவும் புத்தகம் படிச்சுட்டே இருப்பியா?’’ என்று கேட்டாள். நான் இல்லை என்று தலையாட்டினேன். பிறகு, அவளுக்கும் என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றுப் போனதைப் போல மௌனமாக என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அந்த சிரிப்பின் நுனியில் சொல்ல முடியாத வேதனை படிந்திருப்பதைக் காண முடிந்தது.

பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் தந்தபோது அவள் கைகள் லேசாக நடுங்குவதைக் கவனித்தேன். நான் கட்டாயம் திருமணத்துக்கு வர வேண்டும் என்று நாலைந்து முறை கேட்டுக் கொண்டாள். பிறகு அவள் பையில் இருந்து பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

அது 1979&ல் திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த போட்டோவில் இரண்டாவது வரிசையில் நிற்கும் சிறுவனைக் காட்டி, ‘‘நீ எப்படி இருந் திருக்கே, பாரு’’ என்றாள். நான் மௌனமாகச் சிரித் துக்கொண்டேன். ‘‘இந்த போட்டோ வில் நான் எங்கே இருக்கேன் என்று உன்னால் சொல்ல முடிகிறதா?’’ என்று கேட்டாள்.

நான் தயக்கத் துடன் சொன்னேன்... ‘‘திருப்பத்தூரில் நான் படித்ததே இல்லை. இந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை.’’ அவள் முகம் சட்டென மாறியது. பதற்றம் அடைந்தவள் போல சொன்னாள்... ‘‘இல்லை, எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. திருப்பத்தூர்ல கோயில் பக்கம் உங்க வீடு இருந்தது. உங்க அக்கா பேருகூட சுந்தரிதானே?’’

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு அக்காவே கிடையாது; வேறு யாரையோ நினைத் துக்கொண்டு பேசு வதாகச் சொன்னேன். அவள் என்ன செய்வதெனத் தெரியாமல், ‘‘பேருகூட ராமகிருஷ்ணன்னு போட்டிருக்கு’’ என்றாள். ‘‘அது நானில்லை’’ என்று உறுதியாகச் சொன்னதும், அவள் சேலை நுனியால் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவளாக,

‘‘அப்போ அது வேறு யாரோவா? ஸாரி சார்! என்கூடப் படிச்சவர்னு நினைச்சுத் தப்புப் பண்ணிட்டேன்!’’ என்றபடி மஞ்சள் பைக்குள் போட்டிருந்த பணத்தை அவசரமாக எடுத்து என்னிடமே திரும்பக் கொடுத்தாள்.

‘‘பரவாயில்லை, வெச்சுக்கோங்க’’ என்றபோதும் கேட்க வில்லை. ‘‘இல்லை சார்! உங்க போட்டோவைப் பார்த்தப்ப தெரிஞ்ச முகம் மாதிரி இருந்துச்சு. நான் ஏமாத்தணும்னு செய்யலை. என்னை மன்னிச்சிருங்க’’ என்றாள்.

நான் பணத்தை வாங்க மறுத்தவனாக, ‘‘அதனால் என்ன, இப்போயிருந்து நாம ஃப்ரெண்டாக ஆகிக்கொள்ளலாம் தானே?’’ என்றேன். அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரையை வெறித்துப் பார்த்தபடி இருந்தவள், பணத்தை எனது மேஜையில் வைத்துவிட்டு, அதன் மேல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்தாள்.

‘‘உங்களோட படிக்காம போனதுக்காக நான் உண்மையில் இப்போதான் வருத்தப்படுறேன்’’ என்றேன். கைகளைப் பிசைந்துகொண்டே இருந்தவள், பிறகு அந்தப் பள்ளிக்கூட புகைப்படத்தை வாங்கிக்கொண்டு, தான் புறப்படுவதாகக் கிளம்பினாள். எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரிய வில்லை. வாசல் வரை போனவள் திரும்பவும் உள்ளே வந்து, ‘‘என்னை மன்னிச்சிடுங்க சார்! உங்களைச் சிரமப் படுத்திட்டேன். நீங்க கல்யாணத்துக்கு அவசியம் வரணும்’’ என்று சொல்லியபடி விடுவிடுவென நடந்து போனாள். அவளோடு படிக்கவில்லை என்ற உண்மையை எதற்காகச் சொன்னேன் என்று என் மீதே கோபமாக இருந்தது.

பால்யத்தின் புகைமூட்டத்தில் நாம காண்பது எல்லாம் அழிந்த சித்திரங்கள் தானா? அந்தப் பெண்ணின் திருமணப் பத்திரிகையைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலோங்கிக் கொண்டே இருந்தது. உலகில் மிகக் குறைவான நிமிடங்களில் தோன்றி மறைந்த நட்பு இதுவாகத்தான் இருக்கக் கூடுமோ? என்ன உறவு இது!

பால்யத்தின் அழியாத சித்திரங்களை தனது கதைகள் எங்கும் படரவிட்ட தமிழின் அரிய கதைசொல்லி ‘கோணங்கி’. அவரது கோப்பம்மாள் என்ற கதை மிக நுட்பமாகவும் கவித்துவமாகவும் எழுதப்பட்ட அரிய கதையாகும். நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியமான சிறுகதையாசிரியரான கோணங்கி, தனக்கென தனியான புனைவுலகை உருவாக்கியவர்.

கோப்பம்மாள் என்ற சலவைத் தொழிலாளி வீட்டுச் சிறுமியின் வாழ்வை விவரிக்கிறது இக்கதை. கோப்பம்மாளுக்குப் பள்ளிப் படிப்பைவிடவும் வீட்டு வேலைகள் அதிகம் இருந்தன. வீடு வீடாகப் போய் ஊர்க்கஞ்சி எடுக்க வேண்டும். தெருவில் திரியும் கழுதைகளை வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பள்ளிக்குப் போகும்போது கூடவே தம்பியைத் தூக்கிக்கொண்டு போக வேண்டும். அவனோ பள்ளியில் ஆய் இருந்து வைத்துவிடுவான். அதற்காகத் தினமும் வாத்தியாரிடமும் கோப்பம்மாள் அடிபட நேரிடும். இப்படியிருந்த அவளது வாழ்வில், அவளோடு படிக்கும் மாரியப்பன் என்ற சிறுவன் மட்டுமே மிக நட்பாக இருந்தான்.

அவனையும் கோப்பம்மாளையும் ஒரு நாள் சீருடை அணிந்து வராததற்காக ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேற்றி விடுகிறார். தன்னிடம் ஊதாச் சட்டைகளைத் தவிர வேறு சட்டைகளே இல்லை, அந்தச் சட்டைகளும்கூட, இறந்துபோன தனது அய்யாவின் சட்டையை வெட்டித் தைத்தவைதான் என்கிறான் மாரியப்பன். அதிலிருந்து இருவருக்குள்ளும் பெயர் தெரியாத சிநேகம் ஒன்று ஏற்பட்டுவிடுகிறது.

அவள் வீடு வீடாகப்போய் ஊர்க்கஞ்சி வாங்கி வரும்போது, அதில் ஒரு கவளம் அள்ளி உண்பான் மாரியப்பன். அதை ரசித்தபடியே கோப்பம்மாளே இன்னொரு கவளம் அள்ளித் தருவாள். இப்படியிருந்த அவள், ஒரு நாள் ருதுவாகிறாள். அது முதல் அவள் வெளியே வருவது இல்லை.

மாரியப்பனும் படிப்பைத் துறந்து ஆடு மேய்க்கப் போய்விடுகிறான். அதன்பிறகு கோப்பம்மாளுக்குப் பதில் அவளது அம்மா கஞ்சி எடுக்க வருகிறாள். கோப்பம்மாளைப் பார்ப்பதே அரிதாகிவிடுகிறது. பின்னொரு நாள் அவளைப் பெண் கேட்டு தெற்கிலிருந்து ஆள் வருகிறார்கள். ஊரைவிட்டுப் போவதற்குள் ஒரு தடவையாவது மாரி யப்பனைப் பார்க்க வேண்டும் என்று கோப்பம்மாள் ஆசைப்படுகிறாள். ஆனால், பார்க்க முடியவேயில்லை.

என்றோ துவைப்பதற்காக எடுத்து வைத்திருந்த மாரியப்பனின் பழைய ஊதா சட்டை மட்டும் கந்தல் கந்தலாகி அழுக்கு மூடடையில் கிடக்கிறது. உப்பரித்துப்போன அந்தச் சட்டையை மார்போடு அணைத்துக்கொண்டு யாரும் கேட்டுவிடாமல் கேவிக் கேவி அழுகிறாள் கோப்பமாள். பிறகு திருமணம் முடிந்து போகும்போது, கொண்டு போகவேண்டிய மஞ்சள் பையில், அந்த ஊதா சட்டையையும் எடுத்து வைத்துக்கொள்கிறாள். அதை இருள்பூச்சிகள் பார்த்தபடி சத்தமிட்டுக் கொண்டிருப்பதோடு கதை முடிகிறது.

பிராயத்தின் நினைவுகள் மழை விட்டும் மரக்கிளைகளில் இருந்து சொட்டிக்கொண்டு இருக்கும் மழை நீரைப்போல உதிர்ந்துகொண்டுதான் இருக்கும்போலும்! என்னோடு படிக் காமலே எனக்கு மிகவும் நெருக்க மாகிப்போன சித்ராவின் நட்புக்காக இப்போதும் மனதில் மெல்லிய ஏக்கம் படர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன உறவில் அவளோடு நான் பேசுவது என்றுதான் தெரியவில்லை.

தமிழ் நவீன கதையுலகின் தனித்துவமான குரல் கோணங்கி யுடையது. கவிதைக்கு மிக நெருக்க மாக உள்ள உரைநடையும், அரூபங்களைமொழியில் சாத்திய மாக்கிக் காட்டும் விந்தையும் கொண்டது இவரது கதையுலகம். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர்.

மதினிமார்களின் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

இவரது பாழி, பிதுரா என்ற இரண்டு நாவல்களும் தமிழ் நாவலுக்கென்ற மரபான தளங்களை தவிர்த்து, புதிய கதை சொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை.

47 வயதாகும் முழுநேர எழுத்தாளரான கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிக்கிறார். சுதந்திர போரட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மதுரகவி பாஸ்கரதாசின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமயந்தி


கயிற்று ஊஞ்சல்

ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். நகரை விலக்கிய சிறிய கிராமம் ஒன்றின் மரங்கள் அடர்ந்த பகுதியில் தனித்திருந்தது. உள்ளே நுழைகையில் இலைகளுக்குள் ஒளிந்துகொண்டு பறவைகள் சப்தமிடுகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்தார்கள். காப்பகத்துக்குள் நுழைந்தபோது, அது மாலை பிரார்த்தனை நேரம்.பனிச் சிற்பங்களைப் போல உறைந்துபோன நிசப்தத்தில் முதியவர்கள் வணங்கியபடி நின்றிருந்தனர். உதடுகள்கூட அசையவில்லை. பிரார்த்தனைப் பாடலைப் பாடும் பெண்ணின் குரல் நடுங்கிக்கொண்டு இருந்தது. பிரார்த்தனை முடிந்து வெளியேறும் பலரது கண்கள் கசிந்திருந்தன. அழுதிருக்கிறார்கள். அதைத் துடைத்துக்கொள்ளக்கூட மனதற்று நெற்றி நிறைய திருநீறும் வேதனையை அடக்கிய முகமுமாக அவர்கள் மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள்.

அநேகமாக அவர்களைத் தேடிப் பார்வையாளர்கள் வருவது வெகு அபூர்வம் என்பது புரிந்தது. குழந்தைகள் ஒருவரையருவர் இடித்துக்கொண்டு உட்காருவதுபோல நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக்கொண்டபோது, ஒன்றிரண்டு முகங்களில் வயதை மீறி கூச்சமும் வெட்கமும் கலந்து வெளிப் பட்டது.

என்ன பேசுவது என்று தெரியவில்லை. மாலை வெயில் மரங்களுக்கிடையில் கசிந்துகொண்டு இருந்தது. ரெம்ப்ராண்டின் ஓவியம் ஒன்றின் முன் அமர்ந்திருப்பது போல, இமைக்காத கண்களும் சலனமற்ற முகமுமாக என் முன் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தேன். பெரும்பான்மையான முதியவர்களின் கண்கள் உலர்ந்துபோயிருந்தன.

பேச்சை எங்கிருந்து துவங்குவது என்று யாருக்கும் தெரியவில்லை. எதையோ மறந்துபோனவரைப் போல ஒரு முதியவர் தன் அறைக்குள் சென்று, கண்ணில் விடும் சொட்டு மருந்தை எடுத்து வந்து இன்னொரு வயோதிகரிடம் தந்தார். அவரும் பாட்டிலைத் திறந்து சொட்டு மருந்து போட்டுவிட்டார். பிறகு இருவரும் பால்யத்திலிருந்து பழகி வந்த இரண்டு சிறார்களைப் போல ஒருவர் தோள் மீது மற்றவர் கையைப் போட்டுக் கொண்டு அமர்ந்தனர்.


எங்கிருந்தோ ஒரு மயில் அகவும் ஓசை கேட்டது. முதல்முறையாக ஒரு பாட்டி லேசான புன்னகையோடு சொன்னார்... ‘‘மயிலு சார்!’’ மற்றவர் களும் தலையாட்டிக்கொண்டார் கள். ஆனால், பேச்சு துளிர்க்கவே இல்லை. தண்ணீர் வற்றிப்போன கிணற்றைப் போல சொற்களும் மனதில் வற்றிப் போய்விட்டனவா?

மரத்தடியில் அமர்ந்திருந்த பெண் களில் ஒரேயருவர் மட்டும் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயமளவு குங்குமம் வைத்திருந்தார். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே இருந்தார். அவரது பெயரைக் கேட்டபோதும் தரை பார்த்தபடியே பதில் சொன்னார்.

நரைத்த தலையும் சாந்தமான முகமுமாயிருந்த ஒரு பெண்மணி மட்டும் எழுந்து நின்று, பாதி மலையாளம் கலந்த தமிழில் சொன்னார்... ÔÔநான் பாரத் சர்க்கஸில் வேலை செய்தவளாக் கும். எங்க சர்க்கஸ் பல நாடுகள் சுற்றி வந்திருக்கு. எந்தெந்த தேசம் என்று பெயர் மறந்துபோச்சு. பார் விளையாடுறதுல நான் எக்ஸ்பர்ட். பன்னிரண்டு வயசிலே சர்க்கஸ்ல சேர்ந்தது. இருபத்தஞ்சு வருசம் அதில இருந்தாச்சி... இப்பவும் கயிற்றிலே நல்லா ஆடுவேன். ஆனா, வயசாகி தலை நரைச்சவள் பார் ஆடுறதை யார் பாக்கிறது சொல்லுங்கோ... அதான் என்னை வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. சர்க்கஸ்ல இருந்துட்டதால சொந்தம் பந்தம் எல்லாம் விட்டுப் போயாச்சு. அதுனால, வெளியே வந்தப்புறம் எங்கே போறதுன்னு தெரியலை. சர்க்கஸ் கயிற்றிலே ஊஞ்சலாடினப்பகூட பயமா இல்லை. ஆனா, அங்கிருந்து வெளியே வந்தப்புறம்தான் பயம்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சது. யார் வீட்லயும் இருக்க முடியலை. எங்கே போறதுன்னும் தெரியலை. அதான் இங்கே வந்து சேர்ந் துட்டேன். சர்க்கஸ்ல ட்ரெயினிங் எடுத்த வளாக்கும்! ஒரு நோய்நொடி கிடையாது. ஆயிரம் தடவை கை தட்டு வாங்கியிருக்கேன். இப்போ எனக்குன்னு யாருமில்லை. தனியா என் கையை நானே தட்டிக்கிட வேண்டியதுதான்’’ & பேச்சைப் பாதியில் நிறுத்திக்கொண்டு, அமைதியாகி விட்டார். மிருகங்களுக்குக்கூட அடைந்து கிடக்க ஒரு கூண்டு இருக்கிறது. ஆனால், சர்க்கஸில் வேலை செய்து வெளியேற்றப்பட்டவளுக்கு போக்கிடமில்லை என்பது மனதை உறுத்துவதாக இருந்தது. இருட்டு ஒரு புகையைப் போல எங்கும் பரவத் துவங்கியது. அவர்கள் மரத்தடியிலிருந்து கலைந்து போகத் துவங்கினார்கள்.

உள்ளே வரிசையாக படுக்கைகள் போடப்பட்டு இருந்தன. சிறிய மரக் கட்டில், அதன் ஓரத்தில் சிறிய மர அலமாரி. அதில் துவைத்து மடித்துவைத்த துணிகள். ஒரு மெழுகுவத்தி, தீப்பெட்டி. கொசுவத்திச் சுருள். நாலைந்து பழைய கடிதங்கள். அழுகைக் கறை படிந்த தலையணைகள். விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அவரவர் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டார்கள். இன்றைய நாள் முடியப்போகிறது. ஒவ்வொரு நாளையும் அவர்கள் மனதுக்குள்ளாகக் கணக்கெடுத்துக் கொள்கிறார்கள். உறக்கமும் விழிப்புமற்ற ஒரு சயன நிலையில் அவர்கள் கண்கள் சொருகியிருக்கின்றன.

காப்பகத்தின் நிர்வாகி அனைவரை யும் சாப்பிட அழைத்தார். நிழல்களைப் போல அவர்கள் நடந்து போகிறார்கள். உணவருந்தும் சப்தம்கூட கேட்கவில்லை. பின் மெதுவாக படுக்கைக்குத் திரும்பு கிறார்கள். ப்ளாக்போர்டில் ஈரத் துணியை வைத்து அழித்தபடியே நிர்வாகி சில பெயர்களை எழுதுகிறார். அது என்னவென்று கேட்டபோது, ÔÔஒவ்வொரு நாளும் சிலர் மௌன விரதம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதன்படி, நாளைக்கு மௌன விரதம் இருப்பவர்களின் பெயர்கள் இவைÕÕ என்று சொன்னார்.

ஏற்கனவே மௌனத்தின் தாழிக்குள் வீழ்ந்து கிடப்பவர்கள்தானே, இனி எதற்காக தனியே ஒரு நாள் மௌன விரதம் என்று கேட்க நினைத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தபோது நாள் முடிந்து இரவின் நீண்ட பொழுதுக்குள் யாவரும் ஒடுங்கிக் கொண்டு விட்டார்கள். உறக்கத்தில் அவர்களுக்குக் கனவுகள் வருமா? நிச்சயமாகத் தெரியவில்லை.

பிரார்த்தனைகளும் மௌன விரதமும் அவர்களுக்கு என்ன தந்துவிட முடியும்? அவர்கள் யாசிப்பது சாப்பாட்டை அல்ல, மனித உறவை! அதுவும் ஒரே ஒரு ஆள் தன்னைப் புரிந்தவர் இருந்தால்கூடப் போதும், சமாதானமாகி விடுவார்கள். ஆனால், அதுகூடச் சாத்தியமாவதில்லை.

ஒரு மனிதனைப் புறக்கணிப்பதும், தனிமைப்படுத்திவிடுவதும்தான் அவனுக்குத் தரும் மாபெரும் தண்டனை. மகாபாரதத்தில்கூட கௌரவ சேனையின் கடைசி ஆளாக மிஞ்சும் அஸ்வத்தாமா, பாஞ்சாலியின் ஐந்து பிள்ளைகளையும் கொன்று விடுகிறான். உத்திரையின் கர்ப்பத்திலிருக்கும் சிசுவின் மீதுகூட அம்பு எய்கிறான். அவனுக்குக் கிடைக் கும் தண்டனை விசித்திரமானது.

உலகில் நண்பர்கள் யாருமற்றுப் போய், சாவும் இல்லாமல் அவன் சுற்றியலைய வேண்டும் என்று சாபம். வில்லாளிகளில் இந்திரனுக்குச் சமமானவனும் துரோணரின் புத்திரனு மான அஸ்வத்தாமா, இந்த கடுமையான தண்டனையைச் சுமந்துகொண்டு சாவை விலக்கியவனாக தனிமையில் இன்றும் அலைந்துகொண்டு இருக்கிறான் என்கிறது மகாபாரதம்.

சிறுவயதில் நமக்கிருந்த பிரச்னை தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிடுவது. முதுமையிலும் அதுதான் பிரச்னை என்று மார்க் ட்வைன் ஒரு முறை எழுதியிருந்தார். நிஜம்தானே! குழந்தை கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் கவனத்தை ஈர்த்துக்கொண்டு விடுகின்றன. முதுமையில் அதற்கும் சாத்தியமில்லை. இந்தத் தனிமைக்குப் பயந்துதான் பல வயோதிகர்கள் அவமானங்களைச் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிடு கிறார்கள். குடும்பங்களில் குழந்தை கள் அளவுக்கு வயோதிகர்களும் வசையும் திட்டும் வாங்குவது அன்றாடமாகிவிட்டது.

வாழ்வுக்கான போராட்டம் சிக்கலாகத் துவங்கியதும் உறவுகளும் நம்மைச் சுற்றிய மனிதர்களுடன் உள்ள நெருக்கமும் சிக்கலாகிவிடு கின்றன. இதைத் தனது கதையன்றின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமயந்தி. இவரது Ôஅனல்மின் நிலையங்கள்Õ என்னும் கதை குடும்ப உறவுகளின் உண்மையான முகங்களை வெளிப்படுத்துகிறது. தமயந்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் தீவிர படைப்பாளி. இவரது கதைகள் உழைக்கும் பெண்களின் போராட்டங் களைப் பிரதிபலிக்கின்றன. சுய அடையாளமற்றவளாக பெண் நடத்தப்படுவதைச் சகித்துக்கொள்ள மறுக்கும் எதிர்ப்புக் குரல் இவர் கதைகளின் அடிநாதமாக உள்ளது.

‘அனல் மின் நிலையங்கள்’ கதை ஒரு மீனவக் குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டினை விவரிக்கிறது. குறிப்பாக, தூத்துக்குடி கடற்கரையில் உருவாக்கப் பட்ட அனல்மின் நிலையத்தின் காரண மாக அங்குள்ள மீன்பிடித் தொழில் எப்படி மறைமுகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது என்பதைப் பற்றியகதை.

கடலில் ஆஷ்டைக் எனப்படும் சாம்பல் களம் அமைக்கப்பட்டு அதன் வழியாக அனல் மின் நிலையத்தின் கழிவு நீர் கடலில் கலந்துவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் காரணமாக சாம்பல் கற்கள் பாறை போலாகி இறுக்கமாகிவிடு கின்றன.

இந்தக் கழிவின் பாதிப்பால் இனப்பெருக்கமற்று மீன்கள் குறைந்தும் அழிந்தும் போய்விடு கின்றன. இதனால் அவர்களின் பிரதான மீன் பிடிப்பாக இருந்த சிங்கரால் பிடிப்பு அறவே பாதிக்கப் பட்டுவிடுகிறது. அப்படி பாதிக்கப் படும் ஒரு மீனவன்தான் செபஸ்தியான். அவனுடைய தாய்க்கு முன்பு போல வீட்டில் வளமை இல்லை என்ற குறைபாடு இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் அவள் தினமும் செபஸ்தியானின் மனைவி கிரேஸோடு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறாள்.

ஒரு நாள் கிரேஸின் அண்ணன் விருந்தாளியாக வருகிறான். அன்றும் அந்தச் சண்டை நீள்கிறது. இனிமேல் கிழவியை தங்களோடு வைத்துச் சமாளிக்க முடியாது என்று கிரேஸ் அழுது கூப்பாடு போடுகிறாள். வழியில்லாமல் செபஸ்தியான் அம்மாவைத் தன் அண்ணன் வீட்டில் கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறான். ஆனால், அம்மா போக மறுக்கிறாள். கட்டயாப்படுத்தி விருதுநகரில் உள்ள அண்ணன் வீட்டுக்கு கூட்டிப் போகிறான் செபஸ்தியான்.

அங்கே அவன் மதினி அவர்களை வீட்டுக்குள்ளேயே விட மறுக்கிறாள். என்ன செய்வது என்று மறுபடியும் அம்மாவைத் தன் வீட்டுக்கே அழைத்து வருவதற்காக பஸ் ஏறிக் கூட்டி வருகிறான். வழியில் அம்மாவின் பசிக்குத் தேவையான பிஸ்கட்டும் டீயும் வாங்கித் தருகிறான். பஸ் கோவில்பட்டிக்கு வந்து சேர்கிறது. அங்கே பஸ் ஸ்டாண்டில் அம்மாவைத் தனியே உட்கார வைத்துவிட்டு, தூத்துக்குடி பஸ் இருக்கிறதா என்று பார்த்து வருவதாகச் சொல்லி, புறப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறி அவளுக்குத் தெரியாமல் ஊருக்கு கிளம்பிவிடு கிறான் செபஸ்தியான் என்பதோடு கதை முடிந்து விடுகிறது.

பயன்படுத்தி எறிந்த காலி டப்பாக்கள், பழைய காகிதங்களுக்குக்கூட ஏதோ ஒரு விலை, மதிப்பு இருக்கிறது. ஆனால், வயோதிகத்துக்கு அந்த மதிப்புகூட இல்லாமல் போய்விட்டிருக்கிறது. காலம் வயோதிகத் தின் பட்டியலில் நம் பெயரையும் ஒரு நாள் எழுதும் என்பதை நாம் மறந்துவிடுவதுதான் காரணமா?ஆங்கில இலக்கி யத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தமயந்தி, திருநெல்வேலிக்காரர். இவருடைய முதல் கதை 1978&ல் ஆனந்த விகடனில்வெளி யானது. தமயந்தி சிறுகதைகள் என்பது இவரதுமுதல் சிறுகதைத் தொகுப்பு, அக்கக்கா குருவிகள் என்கிறஇவரது சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமானது. தற்போது இவர் திருநெல்வேலியில் சூரியன் எஃப்.எம் வானொலியில் பணியாற்றி வருகிறார்